சிறுதானியங்களின் முக்கியத்துவம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சிறுதானியங்களின் முக்கியத்துவம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
UPDATED : டிச 03, 2023 12:00 AM
ADDED : டிச 03, 2023 10:34 AM
பரமக்குடி:
ஐ.நா., சபை இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று நடப்பு ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி உள்ளிட்டவை சிறுதானியங்களாக உள்ளன. இதன் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.இந்தியாவில் சராசரியாக ஆண்டிற்கு 2.5 மில்லியன் ஹெக்டேரில் சிறு தானியம் சாகுபடி செய்து 2.4 மில்லியன் டன் விளைச்சல் பெறப்படுகிறது. உற்பத்தி திறன் ஹெக்டேருக்கு 1500 கிலோவாக உள்ளது. இவை பயிரிடப்படும் பரப்பளவு மிகக் குறைந்த அளவில் உள்ளதால் இதன் முக்கியத்துவம் மக்கள் மத்தியில் குறைந்தே காணப்படுகிறது.சாகுபடி பரப்பு குறைந்தாலும் சிறு தானிய ஊட்டச்சத்து முக்கியத்துவம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இது குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில் பரமக்குடி அரசு பள்ளியில் பயிலும் பிளஸ் 1 மாணவர்கள் பரமக்குடி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலையால் அமைக்கப்பட்டுள்ள புதிய சிறுதானிய ரகங்கள் மாதிரி திடலை பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர்.அப்போது சிறு தானியங்களின் முக்கியத்துவம் குறித்து ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் மற்றும் தலைவர் முத்துராமு விளக்கினார். ஏற்பாடுகளை முதுநிலை வேளாண் அலுவலர் சந்திரசேகரன், உதவி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, ராமலிங்கம் செய்திருந்தனர்.
