UPDATED : டிச 03, 2023 12:00 AM
ADDED : டிச 03, 2023 10:39 AM
இதயநிறைவு தியானம் பயிற்றுவிக்கின்ற ஹார்ட்புல்னெஸ் அமைப்பு தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆறு கோடி பேருக்கு தியானப் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆயத்த மாநாடு திருப்பூரில் நடந்தது. இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலை ஆகிய நான்கு மண்டலங்கள் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் தியானப்பயிற்சி அளிக்கும் பணி துவங்கி மேற்கொள்ளப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 15 பேரூராட்சி, 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 260 ஊராட்சிகள் என ஏறத்தாழ 2,600 வார்டு பகுதிகளாக அமைந்துள்ளன.இவற்றில் உரிய மண்டல மற்றும் பகுதிகளில் உள்ள மையங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் வாயிலாக இந்த தியானப் பயிற்சி வழங்கும் திட்டம் கடந்த அக்., மாதம் துவங்கப்பட்டது.தொடர்ந்து பகுதிவாரியாக இவை நடந்து வருகின்றன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பை இதில் இணைத்து முற்றிலும் இலவசமாக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.இதுதவிர சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், ஜவுளி தொழில் துறையினருக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. வேளாண் தொழில் சார்ந்த விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.தொழில் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவும் நடத்தப்பட்டது. தொழில் முதலீடு பெறும் முறை; முதலீடு செய்வதற்கான தொழில் குறித்த வழிகாட்டி முறைகள்; கடன் விவரங்கள் உள்ளிட்ட தொழில் மேம்பாட்டுக்கான வழிமுறைகள் குறித்தும் வல்லுனர்கள் உரை இடம் பெற்றது. அதே போல் வேளாண் துறையில் மேம்பாடு குறித்தும் விவசாயிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டது.பெருமளவு பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு தியானப் பயிற்சி மட்டுமல்லாது கல்வி மேம்பாடு குறித்தும், படிப்புக்குப் பின்பான வேலை வாய்ப்புகள் பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. வேலைக்கு விண்ணப்பித்தல், நேர்காணலில் பங்கேற்கும் வழிமுறைகள், வேலை வாய்ப்புகளை முறையாக பெறும் வகையிலான திறன் மேம்பாடு போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. வரும் 2025 ஜூன் மாதத்துக்குள் திட்டமிட்ட ஆறு கோடி பேருக்கான தியானப் பயிற்சி என்ற இலக்கை மிக எளிதில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.மாணவர்களுக்கு வேலைக்கு விண்ணப்பித்தல், நேர்காணலில் பங்கேற்கும் வழிமுறைகள், வேலைவாய்ப்புகளை முறையாக பெறும் வகையிலான திறன் மேம்பாடு போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.ஹார்ட்புல்னெஸ் அமைப்பின் தமிழக அளவிலான செயற்பாட்டாளர்கள் இரண்டு நாள் மாநாடு அண்மையில் திருப்பூரில் நடந்தது. இதன் நிறைவு நாளில், ைஹதராபாத்தில் உள்ள இந்த அமைப்பின் தலைமையகத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பட்டது.ஹைதராபாத் கன்ஹா சாந்தி வனம் ஆசிரமத்தில் அவர், இந்த அமைப்பின் உலக வழிகாட்டி பூஜ்யஸ்ரீ கமலேஷூடன் ஆசிரம வளாகத்தை சுற்றிப் பார்த்தார். அங்கு கூடியிருந்த ஹார்ட்புல்னெஸ் உறுப்பினர்களிடம் பேசினார். அவர் தனது உரையில், உலகிற்கே வழிகாட்டியாக இந்திய நாட்டை வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு, அனைவரும் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். இதற்கு நமது பண்டைய கலைகளான தியானம், யோகாசனம் மற்றும் ஆயுர்வேதம் போன்றவை நன்கு வளர்ச்சி அடைய வேண்டும்.ஹார்ட்புல்னெஸ் அமைப்பு, இவற்றை வளர்த்தெடுப்பதிலும், பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதிலும் பெரும் பணியாற்றி வருவதை இங்கு கண்டு உணர்ந்தேன். அறிவியலும், ஆன்மீகமும் இங்கு பின்னிப் பிணைந்திருப்பதை காண முடிகிறது. இந்திய நாடு இன்னும் முன்னேற்றம் அடைவதற்கு, மகளிர், இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஹார்ட்புல்னெஸ் போன்ற அமைப்புகளின் சீரிய ஒத்துழைப்பால் இது இன்னும் சாத்தியமாகும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது என்று பாராட்டி பேசினார்.
