தாவரங்களிலிருந்து கண்டறியும் ஆராய்ச்சிகள்: பல்கலை கருத்தரங்கில் வலியுறுத்தல்
தாவரங்களிலிருந்து கண்டறியும் ஆராய்ச்சிகள்: பல்கலை கருத்தரங்கில் வலியுறுத்தல்
UPDATED : டிச 04, 2023 12:00 AM
ADDED : டிச 04, 2023 10:10 AM
மதுரை:
மருத்துவக் குண தாவரங்களை பயன்படுத்தி ஆரோக்கியமான மூலக்கூறுகளை கண்டறியும் ஆராய்ச்சிகள் அதிகளவில் நடக்க வேண்டும் என, மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் குமார் வலியுறுத்தினார்.பல்கலையின் தாவரவியல் துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு துணைவேந்தர் குமார் தலைமையில் நடந்தது. துறைத் தலைவர் சந்திரசேகர் வரவேற்றார். துணைவேந்தர் பேசியதாவது:
தாவரங்கள், நுண்ணுயிரிகள் இயற்கையை பாதுகாக்கின்றன. இவற்றில் கிடைக்கும் மூலக்கூறுகள் பயனுள்ளவை. கொரியா பல்கலையில் தாவரங்களை பயன்படுத்தி ஏராளமான மருத்துவ குண மூலக்கூறுகள் தயாரிக்கப்படுகின்றன. அதுபோன்ற ஆய்வுகள் இங்கும் அதிகம் நடக்க வேண்டும், என்றார்.உலக நோனி ரிசர்ச் பவுண்டேஷன் தலைவர் ரத்தினம், மஞ்சணத்தி மரத்தில் இருந்து கிடைக்கும் நோனி (மஞ்சணத்தி) பழம், அதன் பழச்சாறை ஊட்டச்சத்து மருந்தாக உட்கொள்ளும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நீரிழிவு, புற்றுநோய் தீய பக்கவிளைவுகளில் இருந்தும் பாதுகாக்கிறது என்றார்.ஒருங்கிணைப்பாளர் சண்முகையா நன்மை தரும் உயிர் மூலக்கூறுகளில் கிடைக்கும் எதிர்ப்பு சக்திகளால் தீய வகை பாக்டீரியா, பூஞ்சைகளை தடுக்கலாம் என்றார். சென்னை பல்கலை தாவர உயராய்வு மைய தலைவர் மதிவாணன், மலேசியா கன்சுலேட் ஜெனரல் சரவணகுமார், கர்நாடக தர்வாடு, விவசாய பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஹன்சினால், உயிர் வேதியியல் துணைத் தலைவர் ராமசாமி பங்கேற்றனர்.
