பெங்களூரு தமிழ் புத்தக திருவிழா: 1 கோடி தமிழர்களுக்கு தமிழ் கற்று கொடுக்க இலக்கு
பெங்களூரு தமிழ் புத்தக திருவிழா: 1 கோடி தமிழர்களுக்கு தமிழ் கற்று கொடுக்க இலக்கு
UPDATED : டிச 04, 2023 12:00 AM
ADDED : டிச 04, 2023 04:44 PM
பெங்களூரு:
பெங்களூரு தமிழ் புத்தக திருவிழாவில் குழந்தைகள், மாணவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை வாங்குவதற்குரிய கூப்பன்களை, தமிழரான கர்நாடகா சுற்றுலா துறை இயக்குனரும், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவருமான ராம்பிரசாத் மனோகர் வழங்கினார்.மேலும், கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள் பேசுவதாலும், எழுவதாலும் மட்டுமே தமிழ் மொழியை வளர்க்க முடியும். ஒரு கோடி தமிழர்களுக்கு தமிழை கற்று கொடுக்க, இலக்கு நிர்ணயிப்போம் என அவர் சூளுரைத்தார்.கர்நாடகா தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில், பெங்களூரு அம்பேத்கர் சாலையில் உள்ள இன்ஸ்டிடியுஷன் ஆப் இன்ஜினியர்ஸ் கட்டடத்தில், இரண்டாவது தமிழ் புத்தக திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது.திருவிழாவின் மூன்றாவது நாளான நேற்று காலை, பொதுமக்களுக்கு தமிழ் மொழி திறன் போட்டி நடந்தது. பேச்சு போட்டியில் சிவகனி முதல் பரிசையும், திருநாவுக்கரசு இரண்டாம் பரிசையும், முரளி மூன்றாம் பரிசையும் பெற்றனர். கவிதை போட்டியில் பாஸ்கர் முதல் பரிசும், சுப்புலட்சுமி இரண்டாம் பரிசும், சசிகலா மூன்றாம் பரிசும் வென்றனர். கட்டுரை போட்டியில் சிவகனி முதல் பரிசையும், சுப்புலட்சுமி இரண்டாவது பரிசையும், சசிகலா மூன்றாம் பரிசையும் வென்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு புலவர்கள் கி.சு., இளங்கோவன், பொன். கா.சுப்பிரமணியன், தமிழ் மொழி திறன் போடடி பொறுப்பாளர்கள் கார்த்தியாயினி, முனைவர் சரஸ்வதி ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.இதையடுத்து மலர்ச்செல்வனின், ஜோதி மெலோடிஸ் குழுவினர், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பாடல்களை பாடி அசத்தினர். இதில், கர்நாடக மாநில அ.தி.மு.க., செயலர் எஸ்.டி.குமார் கலந்து கொண்டார்.இதன்பின், தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் தமிழ் வளர்கிறது... தளர்கிறது... என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடந்தது. இரு தலைப்புகளிலும் தலா மூன்று பேச்சாளர்கள் பேசினர். முடிவில், தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் தமிழ் தளர்கிறது என்று நடுவர் தீர்ப்பளித்தார்.சிறப்பு மலர் வெளியீடு
இதையடுத்து, இரண்டாம் தமிழ் புத்தக திருவிழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. பல்லாரி மாவட்ட வன திட்ட அதிகாரி வெங்கடேசன் தலைமை வகித்தார். கர்நாடகா சுற்றுலா துறை இயக்குனரும், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவருமான ராம்பிரசாத் மனோகர் சிறப்பு மலர் வெளியிட்டார். இதை ஏ.சுந்தர முருகேசன், கார்த்தி யாயினி, ஆரோக்கிய மேரி, சரஸ்வதி ஆகியோர் பெற்று கொண்டனர். கன்னடர் தமிழர் நல்லிணக்கம் மற்றும் சமூக நற்பணி அறக்கட்டளை தலைவர் என்.ராமசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின் குழந்தைகள், மாணவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான, புத்தக கூப்பன்களை, வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ஜெர்மனியில் உள்ளவர்கள் தங்கள் நாட்டு மொழியை, குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லி கொடுக்கின்றனர். கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள், அவர்களின் குழந்தைகளுக்கு தமிழை கற்று கொடுக்க, முயற்சி செய்வது இல்லை. பேசுவதாலும், எழுவதாலும் மட்டுமே தமிழ் மொழியை வளர்க்க முடியும். 1 கோடி தமிழர்களுக்கு தமிழை கற்று கொடுக்க, இலக்கு நிர்ணயிப்போம், என்றார்.விடுமுறை நாள் என்பதால், ஏராளமானோர் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் புத்தக அரங்கில் புலவர் புராணம், சோழர்கள் இன்று, சங்ககால நாணவியல் தந்தை ஆர்.கிருஷ்ணமூர்த்தி, அந்துமணி பதில்கள் உட்பட பல வகையான புத்தகங்களை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கி சென்றனர்.ரூ.1,000 மதிப்புள்ள புத்தகங்கள் இலவசம் புத்தக திருவிழாவில், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் அரங்கு இடம் பெற்று உள்ளது. இங்கு, தினமலர் ஆண்டு சந்தா 1,999 ரூபாய் ரொக்கம் அல்லது காசோலை, யு.பி.ஐ., மூலம் செலுத்தினால், 1,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை இலவசமாக பெற்று கொள்ளலாம். இங்கு இடம் பெற்றுள்ள புத்தகங்களுக்கு, 10 சதவீத தள்ளுபடியும் உண்டு.ராஜேஷ்குமார், மருந்தக நிறுவன ஊழியர், வசந்த்நகர்:
தமிழ் புத்தகங்களை தேடி தமிழகத்திற்கு செல்கிறோம். ஆனால் நம்மை தேடி தமிழ் புத்தகம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை நான் பார்க்காத பல புத்தகங்கள், இங்கு உள்ளன. புத்தக கண்காட்சி நடப்பது குறித்து மேலும் பிரபலப்படுத்த வேண்டும்.ராமசாமி, ஜீவன்பீமா நகர்:
தினமலர் ஆன்மிக மலர் சிறப்பாக உள்ளது. பாரத, மஹாபாரத கதைகளும், மற்ற மதத்தில் உள்ள நல்ல கருத்துகளும் சிறப்பாக பிரசுக்கின்றனர். புத்தக திருவிழா நடத்துவது சிறப்பு வாய்ந்தது. அனைத்து புத்தகங்களும் கிடைக்கின்றன.விவேகானந்தன், தனியார் ஊழியர், பூதிகெரே:
எனக்கு ரொம்ப பிடித்தது, தினமலர் சிறுவர் மலர். புத்தக திருவிழாவில் நிறைய புத்தகங்கள், வரலாற்று சிறப்புமிக்க நாவல்கள் உள்ளன. சென்னையில் நடக்கும் புத்தக திருவிழா மாதிரி, இங்கும் சிறப்பாக செய்து உள்ளனர். எனது குழந்தைகளுக்கு தமிழை கற்று கொடுக்கிறேன்.வேணுகோபால், தொழிலதிபர், ஜெ.பி., நகர்:
தினமலர் நாளிதழ் பிரசுரித்த, தமிழ் புத்தக திருவிழா செய்தியை பார்த்து, புத்தக திருவிழாவுக்கு வந்து உள்ளேன். பெங்களூரில் புத்தக திருவிழா நடப்பது வரவேற்கத்தக்கது. ஆண்டில் இரண்டு முறை நடந்தாலும் நல்லது. உமாதேவி, ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்:
எனது பிள்ளைகளுக்கு தமிழை பற்றி தெரியப்படுத்த, புத்தக திருவிழாவுக்கு அழைத்து வந்து உள்ளேன். நாங்கள் தேடி வந்த நிறைய புத்தகங்கள் இங்கு கிடைத்து உள்ளன. புத்தக திருவிழா அருமையாக இருந்தது.
