நாளை 4 மாவட்டத்திற்கு விடுமுறை: கவனமாக இருக்க கவர்னர் அறிவுரை
நாளை 4 மாவட்டத்திற்கு விடுமுறை: கவனமாக இருக்க கவர்னர் அறிவுரை
UPDATED : டிச 04, 2023 12:00 AM
ADDED : டிச 04, 2023 04:49 PM
சென்னை:
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை(டிச.,05) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் கனமழை நீடித்து வரும் நிலையில் பொதுவிடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநில அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி நிலைமை சீராகும் வரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி கவர்னர் ரவி அறிவுறுத்தியுள்ளார்.பொதுவிடுமுறையால் 4 மாவட்டங்களில் நாளை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்காது. குடிநீர், பால், மருத்துவ சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவை துறைகள் வழக்கம் போல் இயங்கும்.யாரும் வெளியே வர வேண்டாம்
இது குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியிருப்பதாவது:
மழையால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். கூவம், அடையாறு ஆற்றின் நீரை கடல் உள்வாங்கவில்லை. தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.புயல் குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மிக்ஜாம் புயலால் நமது கிழக்கு கடலோர மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணியிலும் மத்திய, மாநில அரசுத்துறைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இந்த நிலைமையை மத்திய அரசும் மாநில அரசும் உயர்மட்ட அளவில் கண்காணித்து வருகின்றன. மாநில அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி நிலைமை சீராகும் வரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
