UPDATED : டிச 04, 2023 12:00 AM
ADDED : டிச 04, 2023 07:02 PM
புதுச்சேரி:
புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில், மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கோரிமேடு போலீசார் நேற்று முன்தினம், வீமன் நகர், நடு வீதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.வீட்டில் இருந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த பூரன் பிமால், 35, என்பவரிடம் 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., படித்த பூரன் பிமால் தேர்வில் தோல்வி அடைந்ததால், பல ஆண்டுகளாக எம்.பி.பி.எஸ்., செமஸ்டர் தேர்வை எழுத, வெளியில் தங்கி உள்ளார். வருமானம் இல்லாததால் மத்திய பிரதேசத்தில் இருந்து கஞ்சா வாங்கி, ஜிப்மரில் மாணவர்களுக்கு விற்பனை செய்துள்ளார். பூரன் பிமால் தகவலில், ஜிப்மர் மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்த ஐந்தாம் ஆண்டு மாணவர் டில்லியை சேர்ந்த தியான்சு, 23, ஹரியானா பயிற்சி டாக்டர் அக் ஷிக்குமார், 26, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 3.2 கிலோ கஞ்சா, நான்கு மொபைல்போன், 12,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
