காற்று மாசுபாட்டால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும்! விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்
காற்று மாசுபாட்டால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும்! விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்
UPDATED : டிச 05, 2023 12:00 AM
ADDED : டிச 05, 2023 09:36 AM
ஆனைமலை:
காற்று மாசுபாட்டால் இதய மற்றும் சுவாச நோய்கள், மூளைத்தாக்கம், நுரையீரல் புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றன என தேசிய மாசு கட்டுப்பாட்டு தின கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை சார்பில், தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பள்ளியின் தலைமையாசிரியர் கிட்டுச்சாமி தலைமை வகித்தார்.பள்ளியின் அறிவியல் ஆசிரியர்கள் சுதா, ராஜேஸ்வரி, ஷோபனா ஆகியோர் தேசிய மாசு கட்டுப்பாட்டு தினத்தின் அவசியம் குறித்து பேசியதாவது:
தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் ஒவ்வொரு ஆண்டும், டிச., 2ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தின் நோக்கம், 1984ம் ஆண்டு இந்த நாளில் மத்தியப்பிரதேசம் போபாலில் கார்பைட் கெமிக்கல் லிமிடெட் தொழிற்சாலையில் இருந்து, &'மெத்தில் ஐசோசைனேட்&' வாயு வெளியானது.இந்த வாயுவினால் சாதாரண மனிதர்களுக்கு புற்றுநோய், இருமல் போன்றவை ஏற்பட்டு, 3,000க்கும் அதிகமான உயிர் இழப்புகளை சந்தித்ததால், அதனை நினைவுகூறி விழிப்புணர்வு ஏற்படுத்த அனுசரிக்கப்பட்டது.காற்று மாசுபாட்டால் இதய மற்றும் சுவாச நோய்கள், மூளைத்தாக்கம், நுரையீரல் புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றன. தொழிற்சாலைகளின் புகை, வாகனங்களில் புகை, எரிக்கும் கழிவுகளின் புகை போன்றவைதான் இதற்கு காரணம்.இதன் தாக்கம் அக்., முதல் ஜனவரி வரை டில்லி, கொல்கத்தா, ஹரியானா, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் போன்றவற்றில் காணப்படுகிறது. தேசிய மாசு கட்டுப்பாடு தினத்தில், நமது வாகனங்களின் காற்று மாசு குறைக்க முயல்வோம்; குப்பைகளை எரிக்காமல் இருக்க முயல்வோம்.விழாக்களில், பட்டாசு புகை தவிர்ப்போம்; நீர் மாசு குறைக்க முயல்வோம்; பிளாஸ்டிக், மற்ற குப்பைகளை முறையாக கழிவு மேலாண்மை செய்ய முயல்வோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.தேசிய மாசு கட்டுப்பாட்டு தின விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை, வினாடி- வினா மற்றும் ஓவிய போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளியின் தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.
