UPDATED : டிச 07, 2023 12:00 AM
ADDED : டிச 07, 2023 10:05 AM
சென்னை:
தேசாந்திரி பதிப்பகத்தின் புத்தக குடோனுக்குள் மழைநீர் புகுந்ததால், 20 லட்சம் ரூபாய்க்கும் அதிக மான மதிப்புள்ள புத்தகங்களை இழந்து விட்டதாக, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:
சென்னையில் ஏற்பட்ட கடும் புயல், மழையால் எங்கள் தேசாந்திரி பதிப்பகத்தின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. காலை ஐந்து மணி முதல் புத்தகங்களை, வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். கடும் மழையால் வாகனம் எதுவும் கிடைக்கவில்லை.தண்ணீர் சரசரவென உயர்ந்து கொண்டே போனதால், 20 லட்சம் ரூபாய்க்கும் மேலான புத்தகங்கள் நனைந்து வீணாகி விட்டன. மீதமுள்ள புத்தகங்களை காப்பாற்றி எடுத்து வந்து, வீடு முழுதும் நிரப்பியிருக்கிறோம்.வேரோடு சாய்த்தது
நேற்று முழுதும் வீட்டிற்குள்ளும் தண்ணீர் வரும் நிலை. இரண்டு படிகள் தண்ணீரில் முழ்கி விட்டன. மின்சாரமும், இணைய தொடர்பும் இல்லை. எவரையும் உதவி கேட்டு தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனாலும், அருகில் உள்ள நண்பர்கள் ஒடி வந்து, புத்தகங்களை காப்பாற்ற உதவி செய்தனர்.மழை நின்றும் மின்சாரம் இல்லை. வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கண்முன்னே புத்தகங்களை இழப்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இத்தனை ஆண்டு காலம் எழுதிச் சம்பாதித்த பணத்தைக் கொண்டும், வங்கி கடன் உதவியாலும் தான் தேசாந்திரி பதிப்பகம் துவங்கினோம். ஆனால், மழை எங்களை வேரோடு சாய்த்து விட்டது.புத்தக குடோனுக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தோம். ஆனால், இயற்கை பேரிடர்களுக்கு இன்சூரன்ஸ் கிடையாது என்று கைவிரித்து விட்டனர். இப்போது என்ன செய்வது என்று தெரியாத நிலை.நம்பிக்கை
நெருக்கடியான சூழலில் ஈரமான புத்தகங்களுக்கு நடுவே கண் கலங்கி அமர்ந்திருக்கிறேன். எனக்கு தெரிந்த உலகம் புத்தகங்களும் வாசகர்களும் மட்டும் தான். அவர்கள் மீண்டும் என்னை மீட்பர் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன்.இவ்வாறு எஸ்.ராமகிருஷ்ணன் கூறினார்.
