தேன் கூட்டிற்கு தீ வைக்க முயன்ற மாணவர் படுகாயம்: தலைமையாசிரியர் சஸ்பெண்ட்
தேன் கூட்டிற்கு தீ வைக்க முயன்ற மாணவர் படுகாயம்: தலைமையாசிரியர் சஸ்பெண்ட்
UPDATED : டிச 07, 2023 12:00 AM
ADDED : டிச 07, 2023 10:43 AM
கோவை:
கோவையில், அரசு பள்ளி வளாகத்தில் இருந்த தேன் கூட்டை, தீப்பந்தத்தால் அழிக்க முயன்று தீக்காயம் அடைந்த மாணவர் மருத்துவமனையில் சிச்சை பெற்று வருகிறார்.கோவை, தொண்டாமுத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, 53. நேற்று காலை இவரது அறையின் வெளிப்புறத்தில், தேன் கூடு இருந்துள்ளது. ஏழாம் வகுப்பு மாணவர்கள் சந்துரு, சக்திவேல், சூர்யா ஆகிய மூன்று மாணவர்களை பழனிசாமி அழைத்து, தீ வைத்து தேன் கூட்டை அழிக்க கூறியுள்ளார். அவரும், மாணவர்களின் அருகில் நின்று கொண்டிருந்தார்.அப்போது, சந்துரு ஒரு குச்சியில் துணி சுற்றி, தீப்பந்தத்தை தயார் செய்துள்ளார். பள்ளியில் இருந்த சானிடைசர் எடுத்து, சிறிது தீப்பந்தத்தில் ஊற்றி தீ பற்ற வைத்துள்ளார். தீ, அருகிலிருந்த சானிடைசர் பாட்டிலிலும் பற்றி, சந்துருவின் பள்ளி சீருடையில் பற்றியது. தீயை அணைத்து, சந்துருவை பூலுவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு, ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார். கோவை அரசு மருத்துவமனையில், சந்துருவிற்கு, அடி வயிறு முதல் தொடை வரை ஏற்பட்டுள்ள தீக்காயத்திற்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது.அங்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, பேரூர் மாவட்ட கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள், ஆலாந்துறை போலீசார் நேரில் சென்று, மாணவரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து, மாணவரிடமும் விசாரித்தனர்.அதன்பின், சந்துருவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், நேற்று மாலை தலைமை ஆசிரியர் பழனிசாமியை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் உத்தரவிட்டார்.
