UPDATED : டிச 07, 2023 12:00 AM
ADDED : டிச 07, 2023 11:07 AM
புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஜி-20 நாடுகளின் ரூபாய் நோட்டுகள் குறித்த சிறப்பு கண்காட்சி நடந்து வருகிறது.ஜி-20 கூட்டமைப்பின் மாநாடு சமீபத்தில், இந்தியா தலைமை ஏற்று டில்லியில் நடத்தியது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன், பிரேசில் உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.மாநாட்டில், பங்கேற்ற நாடுகளின் பாரம்பரிய பெருமைகளை நினைவு கூறும் வகையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் ஜி-20 நாடுகளில் ரூபாய் நோட்டுகள் குறித்த சிறப்பு கண்காட்சி துவங்கி நடந்து வருகிறது. கண்காட்சியை இந்திராகாந்தி தேசிய கலை மையம் புதுச்சேரியின் மண்டல மையம், உலக பாரம்பரியத்தில் வங்கி எனும் பெயரில் புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைத்து, பல்கலை., மின்னணு ஊடகத் துறையில் வளாகத்தில் நடத்தி வருகிறது.மண்டல இயக்குநர் கோபால் கூறுகையில், ஜி-20 நாடுகளின் ரூபாய் நோட்டுகளின் சிறப்பு தன்மைகளை எடுத்துரைக்கும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது என்றார். 22ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சியை காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணிவரை பார்வையிடலாம்.
