UPDATED : டிச 08, 2023 12:00 AM
ADDED : டிச 08, 2023 11:03 AM
சென்னை:
மழை வெள்ளத்தில் பாட புத்தகங்கள் சேதமான நிலையில், புதிய புத்தகங்கள் வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், மிக்ஜாம் புயலால் பெய்த, 24 மணி நேர கனமழை, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், வீடுகளில் இருந்த எலக்ட்ரானிக் பொருட்கள், புத்தகங்கள் என, பல வகை பொருட்களும் சேதமடைந்து உள்ளன.இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாட புத்தகங்களை இழந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, அரசு சார்பில் இலவச புத்தகங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மழை வெள்ள விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டதும், புத்தகத்தை இழந்த மாணவர்களை கணக்கிட்டு, புதிய புத்தகங்களை தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும் என, பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
