விண்வெளி துறையில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்: இஸ்ரோ விஞ்ஞானி
விண்வெளி துறையில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்: இஸ்ரோ விஞ்ஞானி
UPDATED : டிச 08, 2023 12:00 AM
ADDED : டிச 08, 2023 11:26 AM
கர்நாடகா தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில், பெங்களூரு அம்பேத்கர் சாலையில் உள்ள இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் கட்டடத்தில், கல்லுாரி மாணவர்களுக்கான நடனம், உரை வீச்சு, உரையாடல் தமிழ் மொழித்திறன் போட்டிகளுடன் நடந்தன.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, முதல் பரிசு 3,000 ரூபாய்; இரண்டாவது பரிசு 2,000 ரூபாய், மூன்றாவது பரிசு 1,000 ரூபாய் மதிப்புள்ள புத்தக கூப்பன்கள், சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.பரிசளிப்பு விழா
சமூக ஆர்வலர் ராபர்ட் கிளைவ் தலைமையில் பரிசளிப்பு விழா நடந்தது. ஐ.டி.ஐ., தமிழ் மன்ற தலைவர் பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினார்.பின், இந்திய விண்வெளித்துறையில் தமிழர்களின் பங்கு என்ற தலைப்பில், இஸ்ரோ விஞ்ஞானியும், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் பொது செயலருமான வீராணம் சு.முருகன் பேசியதாவது:
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முதன் முறையாக எஸ்.எல்.வி., விண்கலத்தை ஏவிய போது, தோல்வி அடைந்தார். தவறை சரி செய்து, அடுத்தாண்டே வெற்றிகரமாக மீண்டும் ஏவினார். தமிழ் வழியில் பயின்று சாதனை படைத்தவர் அவர்.ஆர்.எம்.வாசன், ராக்கெட் தயாரிப்பில் புது தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர். 1965ல், ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து, ஆப்பிள் விண்கலம் ஏவியதில் முக்கிய பங்கு ஆற்றியவர். ராக்கெட்டின் திரவ உந்துதல் பிரிவில், முத்து நாயகம் பங்கு முக்கியமானது.கோவில்பட்டியை சேர்ந்த பெருமாள், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தயாரிப்பில் தன் திறமையை வெளிப்படுத்தியவர். திருநெல்வேலியை சேர்ந்த நம்பி நாராயணன், திரவ உந்துதல் பிரிவில் சிறப்பாக பணியாற்றியவர்.பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., - எஸ்.எல்.வி., திட்டங்களில் இவரது பங்கு பெரியது. நிலவுக்கு சந்திரயான் - 1 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, விண்வெளித் துறையில் சிறப்பாக பணியாற்றினார். யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மைய இயக்குனராகவும் இருந்தார்.சென்னையை சேர்ந்த ராமகிருஷ்ணன், ராக்கெட் மனிதர் என்று அழைக்கப்படுவார். அந்த அளவுக்கு ராக்கெட் ஏவுதளத்தில் புது யுத்தியை பயன்படுத்தியவர். பல விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தியவர். ஞானகாந்தன் என்பவர், திரவ கிரையோஜெனிக் எனும் திரவ எரிபொருள் தொழில்நுட்பத்தில் சிறப்பாக பணியாற்றியவர்.மதுரையை சேர்ந்த சிவசுப்பிரமணியன், ரேடார் வரைபடம் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர். விஞ்ஞானி வளர்மதி, செயற்கை கோளில் இருந்து, எடுக்கப்படும் படங்களை கண்காணிக்கின்றனர்.நாகர்கோவிலை சேர்ந்த சிவன், இஸ்ரோவின் தலைவராக பொறுப்பு வகித்தவர். சந்திரயான் - 2, மங்கள்யான் உட்பட பல திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். மிக பெரிய உழைப்பாளி. திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்துதல் மையத்தின் இயக்குனர் நாராயணனின், விண்வெளித் துறையின் பங்கு பெரியது.சந்திரயான் - 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பற்றி அனைவரும் அறிவர். இது போன்று, வனிதா முத்தையா, நிகர் சாஜி, ராஜராஜன், ஆசிர் பாக்கியராஜ், பாண்டியன், அழகுவேல், சங்கரன் உட்பட ஏராளமான தமிழர்கள் விண்வெளித்துறையில் சாதனை படைத்தவர்களே.இஸ்ரோவில் ஆண்டுதோறும் 150 பேர் பொறியாளர்கள் வரை வேலைக்கு எடுப்பர். இதில், ஆரம்ப கட்டத்தில், 30 தமிழர்கள் இருந்தனர். இப்போது, குறைந்து விட்டனர். எனவே மாணவர்கள் அதிக அளவில் விண்வெளித் துறையில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்
