UPDATED : டிச 08, 2023 12:00 AM
ADDED : டிச 08, 2023 12:04 PM
கோவை:
நான் முதல்வன் திட்டத்தில், கல்லுாரி மாணவர்கள் தங்களது சிந்தனையில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க, பேராசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தினார்.தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில், &'நான் முதல்வன் நிரல் திருவிழா&' தொடர்பாக, மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக, தொழில்நுட்ப கல்லுாரி, கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:
மாணவர்களிடம் ஒளிந்திருக்கும் திறன்களை வெளிக்கொணர்ந்து, தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தவும், புதிய வேலைவாய்ப்பு, தொழில் முனைவோரை உருவாக்கவும், நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, நிரல் திருவிழா நடத்தப்படுகிறது.இதில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, புத்தாக்க சிந்தனையில் உள்ளூர் தேவைக்கேற்ப புதிய பொருட்களை மாணவர்கள் கண்டறிய வேண்டும். இதற்கென புதிய வலைதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.பொறியியல் கல்லுாரிகளில் இருந்து இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு வழிகாட்டி, முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு வழிகாட்டி, ஒவ்வொரு கல்வி நிறுவனத்தில் இருந்தும் ஒரு வழிகாட்டி வீதம் தேர்வு செய்யப்படுவர். இவர்கள், மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பர்.இறுதியாண்டு மாணவர்கள் கட்டாயம் புராஜெக்ட் தயாரிக்க வேண்டும்; கடனுதவி வழங்கப்படும். பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தினால், ரூ.30 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பரிசுத்தொகை வழங்கப்படும். நான் முதல்வன் இணையதளம் வாயிலாக பிரச்னைகளுக்கான தீர்வுகள் சேகரிக்கப்படுகிறது.புத்தாக்க பிரச்னைக்கான தேவை குறித்து நடப்பாண்டு மாணவர்கள் கண்டுபிடிப்புகள் தயரிக்க இருக்கின்றனர். புதிய சிந்தனையில் பல்வேறு கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க, கல்லுாரி பேராசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.கூட்டத்தில், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் வளர்மதி, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றம் புத்தாக்க நிறுவன முதன்மை பயிற்சியாளர் ராதிகா மீனாட்சி, ஒருங்கிணைப்பாளர் சரண்யா மற்றும் பலர் பங்கேற்றனர்.
