UPDATED : டிச 09, 2023 12:00 AM
ADDED : டிச 09, 2023 10:34 AM
பெங்களூரு:
பெங்களூரு தமிழ் புத்தக திருவிழா, நாளை நிறைவு பெறுகிறது.கர்நாடகா தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பெங்களூரு அம்பேத்கர் சாலையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடுயூட் ஆப் இன்ஜினியர்ஸ் கட்டடத்தில், இரண்டாம் ஆண்டு தமிழ் புத்தக திருவிழா, கடந்த 1ம் தேதி துவங்கியது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான மொழிதிறன் போட்டிகள் தினமும் நடந்தது.இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, புத்தகம் வாங்க பரிசு கூப்பன் வழங்கப்பட்டது. பரதநாட்டியமும் அரங்கேறின. தமிழ் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், விஞ்ஞானிகள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களை ஊக்கப்படுத்தினர்.புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்டு இருந்த, புத்தக அரங்குகளில் புத்தக விற்பனை மும்முரமாக நடந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை தேடி, தேடி வாங்கி சென்றனர். பல நாட்களாக கிடைக்காத புத்தகங்கள் கிடைத்ததால், சிலர் அதிக உற்சாகம் அடைந்தனர். மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய, புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.அரிய புத்தகங்கள்
ஆன்மிகம், தொழில், பொருளாதாரம், வரலாறு, சிறுகதை புத்தகங்களை குடும்பத்துடன் வந்து வாங்கினர். புத்தங்களுடன் உற்சாகமாக &'செல்பி&' எடுத்தும் மகிழ்ந்தனர். கர்நாடகாவில் தமிழ் புத்தக திருவிழாவை நடத்தி, பல அரிய புத்தங்களை தங்கள் கைக்கு கிடைக்க செய்த, கர்நாடகா தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் முயற்சிக்கு பாராட்டும் தெரிவித்தனர்.தமிழ் மரபு விளையாட்டு பொருட்களை, சிறுவர்கள் ஆர்வத்துடன் விளையாடி மகிழ்ந்தனர். புத்தக வெளியீடு, பட்டிமன்றம் என புத்தக திருவிழா தினமும் களைகட்டியது. எட்டாவது நாளான நேற்றும், காலை முதல் இரவு வரை, பொதுமக்கள் புத்தகங்களை வாங்கி சென்றனர்.இந்நிலையில் புத்தக திருவிழா நிறைவு பெறும் தருவாய்க்கு வந்து உள்ளது. இன்றும், நாளையும் மட்டுமே நடக்கிறது. வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால், இன்றும், நாளையும் அதிக அளவில் பொதுமக்கள் வருவர் என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
