UPDATED : டிச 09, 2023 12:00 AM
ADDED : டிச 09, 2023 10:38 AM
புதுடில்லி:
ஆதித்யா எல் 1 விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டது.சூரியனை ஆய்வு செய்ய, கடந்த செப்., 2ல், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ விண்ணில் ஏவியது.இது, பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., துாரம், 125 நாட்கள் பயணித்து, சூரியனுக்கு அருகில் உள்ள, எல் 1 எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்தப்பட உள்ளது. அதன்படி, ஜன., 7ம் தேதி, எல் 1 புள்ளியில், ஆதித்யா எல் 1 விண்கலம் நிலை நிறுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், ஆதித்யா எல் 1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள, சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் வாயிலாக எடுக்கப்பட்ட சூரியனின் புகைப்படங்களை, இஸ்ரோ நேற்று வெளியிட்டது.அதில், சூரியனை சுற்றியுள்ள குரோமோஸ்பியர் மண்டலம் வெவ்வேறு அலைநீளத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. 200 - 400 நானோ மீட்டர் வரையிலான அலைநீளங்களில், சூரியனின் முதல் முழு- வட்டு புகைப்படங்கள் கிடைக்க பெற்றுள்ளன. இந்த படங்கள், சூரியனின் ஒளிக்கோளம் மற்றும் குரோமோஸ்பியர் பற்றிய சிக்கலான ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக இருக்கும் என, கூறப்படுகிறது.
