கரிசல் இலக்கிய திருவிழா துவக்கம்: எழுத்தாளர்கள் பங்கேற்பு
கரிசல் இலக்கிய திருவிழா துவக்கம்: எழுத்தாளர்கள் பங்கேற்பு
UPDATED : டிச 09, 2023 12:00 AM
ADDED : டிச 09, 2023 10:42 AM
விருதுநகர்:
விருதுநகரில் முதன்முறையாக கரிசல் இலக்கியதிருவிழா நிகழ்ச்சி துவங்கியது. தென்மாவட்ட எழுத்தாளர்கள் பலர் பங்கேற்று பேசினர்.வானம் பார்த்த பூமியாக கிடக்கும் கரிசல் நிலத்தைகதைக் களமாகவும் அங்கு வாழும் மனிதர்களைக் கதை மாந்தர்களாகவும் கொண்டு, அவர்களின் வாழ்வியல், வலிகளை, சந்தோஷத்தை வட்டார மொழிநடையில் கூறும் இலக்கியமே கரிசல் இலக்கியம்.கரிசல் இலக்கியப் படைப்புகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதும், புதிய படைப்பாளர்களை உருவாக்குவதும் இந்த கரிசல் இலக்கியத் திருவிழாவின் முக்கிய நோக்கம். நேற்று இந்த விழா துவங்கியது.கலெக்டர் பேசுகையில், கரிசல் இலக்கியத்தை பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் இந்த மண்ணின் தொடர்ச்சியான பண்பாட்டு மாற்றத்தை ஆய்வு செய்து கட்டுரையை கொண்டு வந்துள்ளனர். சமகால படைப்புகளை தொகுத்து ஒரு நூலாகவும், கால வரிசைப்படி, இந்த மண்ணை புரிந்து கொள்வதற்கு சிறுகதை தொகுப்பாகவும் வெளியிட உள்ளோம், என்றார்.எழுத்தாளர் பெருமாள் முருகன் பேசுகையில், வட்டார இலக்கியம் என்பது அந்தந்த பகுதியில் உள்ள மக்களின் பண்பாடு, மொழிகளின் அமைப்பு பொருத்து உள்ளது. இதில் தனித்தன்மை வாய்ந்த இலக்கியமாக கரிசல் இலக்கியம் உள்ளது, என்றார்.எஸ்.ராமகிருஷ்ணன் காணொலி வாயிலாக பேசினார். எழுத்தாளர்கள் தமிழ்செல்வன், நாறும்பூநாதன், மாதவராஜ் சுலோசனா, லட்சுமிகாந்தன், காமராஜ், மணிமாதவி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். டி.ஆர்.ஓ.,ரவிக்குமார், திட்ட இயக்குனர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
