ஆசிரியர் நியமனத்தில் பெங்களூரு மாநகராட்சி குளறுபடி!
ஆசிரியர் நியமனத்தில் பெங்களூரு மாநகராட்சி குளறுபடி!
UPDATED : டிச 10, 2023 12:00 AM
ADDED : டிச 11, 2023 09:07 AM
பெங்களூரு:
துறையில் முன்அனுபவம் இல்லாத டிடெக்டிவ் ஏஜன்சியிடம், பள்ளி, கல்லுாரிகளுக்கு ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்களை தேர்வு செய்து ஒப்படைக்கும் பொறுப்பைக் கொடுத்து, பெங்களூரு மாநகராட்சி சர்ச்சையில் சிக்கியுள்ளது.பெங்களூரு மாநகராட்சியின் பள்ளி, கல்லுாரிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக ஆசிரியர் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.அனுபவம் இல்லை
ஒப்பந்த ஆசிரியர்கள், பேராசிரியர்களின் பதவிக் காலம், 2022ல் முடிவடைந்தது. அதன்பின் புதிதாக ஆசிரியர், பேராசிரியர்களை நியமிக்க, மாநகராட்சி டெண்டர் அழைத்தது. டெண்டரை முடிவு செய்வது தாமதமானதால், இதற்கு முன்பிருந்த கிறிஸ்டல் இன்போ சிஸ்டர் நிறுவனத்தின் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின் மாநகராட்சியின் கல்விப்பிரிவு, மூன்று முறை டெண்டர் அழைத்தபோதும், கிறிஸ்டல் நிறுவனம் மட்டுமே பங்கேற்றது.எனவே விதிகளை தளர்த்தி, நான்காவது முறை டெண்டர் அழைத்தது. இதில் அப்பு டிடெக்டிவ் அண்டு செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனம் பங்கேற்றிருந்தது. இந்த நிறுவனத்துக்கு டெண்டர் கிடைத்தது.இந்த நிறுவனத்துக்கு ஆசிரியர்களை தேர்வு செய்து பரிந்துரைத்த அனுபவம் இல்லை. இத்தகைய நிறுவனத்துக்கு மாநகராட்சி டெண்டர் அளித்தது, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. மாநகராட்சியின் இந்த முடிவை கல்வி வல்லுனர்கள் கண்டித்துள்ளனர். கல்வியாண்டு துவங்குவதற்கு முன்பே, பள்ளி, கல்லுாரிகளுக்கு ஆசிரியர், பேராசிரியர்களை நியமித்திருக்க வேண்டும்.அதிருப்தி
ஆனால் ஆண்டு தேர்வுக்கு, இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், ஆசிரியர்கள், பேராசிரியர்களை நியமிக்க மாநகராட்சி முற்பட்டதும், இதற்காக டிடெக்டிவ் ஏஜன்சிக்கு டெண்டர் அளித்ததும் சரியல்ல என பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மாநகராட்சியின் நடவடிக்கை குறித்து, சட்டமேலவையிலும் கூட, உறுப்பினர்கள் அதிருப்தியை பதிவு செய்தனர்.இதுகுறித்து, பா.ஜ.,வின் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் கூறியதாவது:
மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளில் பெரும்பாலும் ஏழை மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அரையாண்டுத் தேர்வு நடக்கும் நிலையில், ஆசிரியர்களை இடமாற்றுவதோ, புதிதாக நியமிப்பதோ கூடாது.இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். மாநகராட்சி கல்வி பிரிவு அதிகாரிகள், எதையும் ஆராயாமல் ஆண்டுத் தேர்வுக்கு மூன்று மாதங்களே உள்ளபோது, ஆசிரியர்களை மாற்ற முற்படுவது சரியல்ல. தற்போது கிறிஸ்டல் இன்போ சிஸ்டம் நிறுவனம், ஆசிரியர்கள், பேராசிரியர்களை நியமித்துஉள்ளது.குழப்பம்
இவர்களை மாற்றக் கூடாது. 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.இவர்களை திடீரென பணியில் இருந்து நீக்கினால், இவர்களின் கதி என்ன?அரையாண்டுத் தேர்வு நடக்கும்போது, ஆசிரியர்களின் பணியை ரத்து செய்து, புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு, இதற்கு முன்பு எத்தனை பாடங்கள் நடத்தப்பட்டன என்பது எப்படித் தெரியும்? மாணவர்களை தேர்வுக்கு தயாராக்குவதிலும் அவர்களுக்கு குழப்பம் ஏற்படலாம்.இது மாணவர்களின் மனநிலையையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. தற்போது பணியாற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்களில் பலர் பி.எச்.டி., மற்றும் டாக்டரேட் பட்டம் பெற்றவர்கள். 40 வயதுக்கு மேற்பட்டோரும் பணியாற்றுகின்றனர். இவர்களை திடீரென நீக்குவது, நியாயமே அல்ல. எனவே டிடெக்டிவ் ஏஜன்சிக்கு அளித்த டெண்டரை ரத்து செய்து, பழைய நிறுவனத்தை தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பெங்களூரு மாநகராட்சி பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் நியமனம், என் துறை சம்பந்தப்பட்டது அல்ல. ஆனால், ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கும் பொறுப்பை, டிடெக்டிவ் ஏஜென்சியிடம் அளித்தது குறித்து, விசாரிக்கப்படும். விதிகளின்படி டெண்டர் அளிக்கவில்லை என்றால், அதை ரத்து செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என கல்வித்துறை அமைச்சர், மது பங்காரப்பா, கூறியுள்ளார்.
