UPDATED : டிச 11, 2023 12:00 AM
ADDED : டிச 11, 2023 09:52 AM
சென்னை:
மிக்ஜாம் புயலால் அறிவிக்கப்பட்ட ஒரு வார விடுமுறை முடிந்து, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், 4ம் தேதி முதல் நான்கு மாவட்டங்களிலும், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது.இந்த விடுமுறை முடிந்து, பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு ஏற்ற சூழல் மற்றும் கட்டமைப்பு ஏற்படுத்துதல் போன்ற சீரமைப்பு பணிகளை கண்காணிக்க, 17 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், பள்ளிகளில் துாய்மை பணிகளை மேற்கொள்ள, 1.90 கோடி ரூபாய் ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு, தலா, 50 லட்சம் ரூபாய்; காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு, 40 லட்சம் ரூபாய் என, 1.90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.வெள்ள பாதிப்பில், புத்தகம், சீருடை, நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தக பைகளை இழந்த மாணவர்கள் குறித்து, இன்று பள்ளிகளில் கணக்கெடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக பாடப்புத்தகம் மற்றும் நோட்டு புத்தகங்களை, மாணவர்களுக்கு நாளை வழங்க உள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
