உயர்நிலை பள்ளி மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிக்க அரசு முடிவு
உயர்நிலை பள்ளி மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிக்க அரசு முடிவு
UPDATED : டிச 11, 2023 12:00 AM
ADDED : டிச 11, 2023 10:16 AM
தட்சிண கன்னடா:
மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவியருக்கு, இம்மாதம் அனைத்து பள்ளிகளிலும் கராத்தே தற்காப்பு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும் என மாவட்ட பொதுக்கல்வி துறை துணை இயக்குனர் தயானந்த நாயக் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி:
பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் ஒருங்கிணைந்த கல்வி மூலம், அனைத்து மாவட்டங்களிலும், ராணி லட்சுமிபாய் தற்காப்பு பயிற்சி நடத்தப்படும்.8, 9 மற்றும் 10ம் வகுப்புகளில் உள்ள மாணவியருக்கு உள்ளூர் கராத்தே வல்லுனர்கள் தற்காப்பு பயிற்சி அளிப்பர். ஒவ்வொரு பள்ளியிலும், 10 அமர்வுகளாக பயிற்சி நடத்தப்படும். பயிற்சியாளர்களுக்கு கவுரவ ஊதியம் வழங்க ஒவ்வொரு பள்ளிக்கும் 3,000 ரூபாய் வழங்கப்படும்.இத்திட்டம் மாணவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சியை மேம்படுத்தல், தற்காப்பு திறன்களை மேம்படுத்துதல் மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. கிராமப்புறங்களில் கால்நடையாக வரும் மாணவியர், தனியாக இருக்கும் போது, யாராவது தாக்க வந்தால், தற்காப்புக்கு இதுபோன்ற பயிற்சி உதவியாக இருக்கும். பயிற்சிக்கு முன் மாணவியர் உடல் ஆரோக்கியத்துடன், இருப்பதை உறுதி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பயிற்சியில் இருந்து விலக்கப்படுவர்.என்ன பயிற்சி?
திறன் பயிற்சிக்காக தனி பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கராத்தே பயிற்சியாளர்கள் பெண் மாணவியருக்கு முகத்தில் குத்து, லோயர் பஞ்ச், கால்களால் உதைத்தல், தற்காப்பு உத்திகள், கராத்தே கட்டா முறை, குத்தும் உத்திகள் போன்ற எதிர் தாக்குதல் நுட்பங்கள் கற்பிக்கப்படும்.பயிற்சியில் அந்தந்த பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படுவர். பின், மாணவியர், தாங்கள் கற்றுக்கொண்ட திறமைகளை மறக்காமல் தொடர செய்வர். தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள 10 ஆயிரத்து 840 மாணவியர் கராத்தே திறன்களை கற்றுக்கொள்வர். இவ்வாறு அவர் கூறினார்.
