கல்விப்பணியில் எண்பதாண்டுகளை தாண்டிய கள்ளழகர் கோயில்
கல்விப்பணியில் எண்பதாண்டுகளை தாண்டிய கள்ளழகர் கோயில்
UPDATED : டிச 11, 2023 12:00 AM
ADDED : டிச 11, 2023 10:42 AM
அழகர்கோவில்:
மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயில் கல்விப் பணியில் எண்பதாண்டுகளை தாண்டி செல்வதை இக்கோயில் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.சுதந்திரத்திற்கு முன்பு 1940 ஆண்டில் அழகர்கோவில் பகுதி கிராமங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்குஉதவும் நோக்கத்துடன், அப்போதைய சென்னை மாகாண ஹிந்து சமய அறநிலைய வாரிய தலைவர் கொண்டப்பகாரு என்பவரால் துவக்கி வைக்கப்பட்டது.இது ஆரம்பத்தில் குருகுல பாடசாலை என அழைக்கப்பட்டது.கள்ளழகர் கோயிலின் ஆடிவீதியிலுள்ள ராஜகோபுர வாசல் வழியாக வந்தால் வசந்த மண்டபம். இங்குதான் அக்காலத்தில் குருகுலம் இயங்கி வந்துள்ளது. இதற்கான சான்றாக இங்குள்ள உட்புற சுவரில் கரும்பலகைகளும், வெளிப்புறச் சுவரில் கல்வெட்டை இன்றும்காணலாம். சோலைகள் நிறைந்த இப்பகுதியில் கோட்டைச் சுவரின் பாதுகாப்பில் அக்கால மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டது சிறப்பானதாக கருதப்படுகிறது.உணவு, உடை, கல்வி உபகரணங்கள் என அனைத்து வசதிகளையும் கோயில் நிர்வாகமே ஏற்படுத்தி ஏழை மாணவர்களின் கல்விப் பசியை போக்கியுள்ளது. ஆரம்பப்பள்ளியாக இருந்து சில ஆண்டுகளில் நடுநிலைப்பள்ளியாக மாறியது.சாதாரண மண்டபத்தில் துவங்கிய குருகுலம், இன்று பல்வேறு உட்கட்டமைப்புகள், 400 மாணவர்களுடன் இருபாலரும் பயிலும் சுந்தரராசா உயர்நிலைப் பள்ளியாக பரிணாமம் பெற்றுள்ளது.கள்ளழகர் கோயில் நிர்வாகம் சார்பில் இன்று வரை இலவசமாக கல்வி வழங்கி வருவதையும், இப்பள்ளி 83 ஆண்டுகளை கடந்து நுாற்றாண்டை நோக்கி சென்று கொண்டிருப்பதையும் நினைத்து ஆசிரியர்கள், பெற்றோர் பெருமிதம் கொள்கின்றனர்.
