ஐ.ஐ.டி., மும்பை, ஐ.ஐ.டி., சென்னைக்கு பெட் எக்ஸ் 10 மில்லியன் டாலர் நிதி வழங்க உறுதி
ஐ.ஐ.டி., மும்பை, ஐ.ஐ.டி., சென்னைக்கு பெட் எக்ஸ் 10 மில்லியன் டாலர் நிதி வழங்க உறுதி
UPDATED : டிச 12, 2023 12:00 AM
ADDED : டிச 12, 2023 06:00 PM
சென்னை:
பெட் எக்ஸ் நிறுவனம் இந்திய தொழில்நுட்ப பல்கலைகளான ஐ.ஐ.டி., மும்பை மற்றும் சென்னை ஐ.ஐ.டிகளுக்கு 10 மில்லியன் டாலர் பொறுப்புணர்வு நிதி வழங்க உறுதி அளித்துள்ளது.பெட் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திறமையான நபர்களை ஊக்கப்படுத்துதல், ஆராய்ச்சி மேம்பாட்டு பணிகளை தீவிரப்படுத்துதல், முதுகலை மற்றும் பிஎச்.டி மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்குதல், தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகளை இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், உயர் சிறப்பு மையம் மூலம் மேற்கொண்டு வருகின்றன. சென்னை மற்றும் மும்பை ஆகிய இரு ஐ.ஐ.டி வளாகங்களிலும் உள்ள உயர் சிறப்பு மையத்தை உரிய உள்கட்டமைப்பு வசதிகளோடு அமைக்க தனது பங்களிப்பை அளிக்க பெட் எக்ஸ் நிறுவனம் 10 மில்லியன் டாலர் நிதி வழங்க முன்வந்துள்ளது, என கூறப்பட்டுள்ளது. பெட் எக்ஸ் நிறுவனத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராஜ் சுப்ரமணியம் கூறுகையில், நமது சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை அளிக்கும் வகையில் இந்த மதிப்புமிக்க நிறுவனங்களுடன் எங்களது ஒத்துழைப்பு முக்கியமானதாக இருக்கும், என்றார்.ஐ.ஐ.டி மும்பை இயக்குனர் சுபாசிஸ் சௌத்ரி கூறுகையில், எதிர்கால தீர்வுகளை மேம்படுத்தவும், தொழில் முன்னேற்றத்தை உருவாக்கவும், திறமையான மாணவர்களை உருவாக்க ஆதரவளிக்கும் வகையில் தொழில் துறையினருடன் பணியாற்ற ஐ.ஐ.டி உறுதி பூண்டுள்ளது. பெட் எக்ஸ் நிறுவனத்தின் அதிநவீன டெலிவரி வளர்ச்சி, விநியோகச் சங்கிலிகளின் டிஜிட்டல் மாற்றம் போன்ற முக்கிய முயற்சிகளில் எங்களது ஒத்துழைப்பு இருக்கும், என்றார்.ஐ.ஐ.டி., சென்னை இயக்குனர் காமகோடி கூறுகையில், தொழில்நுட்பத்தையும், திறமையையும் ஒன்றிணைத்து நீடித்த போக்குவரத்தை இயக்குவதற்கான மையத்தை பெட் எக்ஸ் உடன் இணைந்து உருவாக்க திட்டமிட்டுள்ளோம். செயல்பாட்டு ஆராய்ச்சி மற்றும் நெட்வொர்க் திட்டமிடல் ஆகியவற்றின் மூலம் நீடித்த தளவாட போக்குவரத்தை மேலும் விரிவுபடுத்த செய்வதை நோக்கமாக கொண்டுள்ளோம், என்று கூறினார்.
