UPDATED : டிச 18, 2023 12:00 AM
ADDED : டிச 19, 2023 09:34 AM
சென்னை:
குரூப் - 2 தேர்வு முடிவுகள் ஜன., 12ம் தேதி வெளியிடப்படும் என, அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செய்திக்குறிப்பு:
குரூப் - 2 முதன்மை எழுத்து தேர்வு தொடர்பாக, அதிக அளவிலான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி இருந்தது. ஒரே நேரத்தில் மதிப்பீடு செய்ய வேண்டிய தேர்வு முடிவுகள் மற்றும் பிற தேர்வுகளும் நடத்த வேண்டி இருந்தன.இதனால், குரூப் - 2 முதன்மை எழுத்து தேர்வு முடிவுகளை, டிசம்பரில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவுகளை விரைவாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள், துரிதமாக நடந்து வருகின்றன.ஒரே சமயத்தில், பல தேர்வுகள் நடத்த வேண்டிய சூழ்நிலையுடன், சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக, விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு, தற்போது கூடுதல் காலம் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.சவால்கள் இருந்த போதிலும், குரூப் - 2 தேர்வின் தேர்வு முடிவுகள், ஜன., 12ம் தேதி வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் குரூப் - 2 தேர்வு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
