UPDATED : டிச 18, 2023 12:00 AM
ADDED : டிச 19, 2023 09:37 AM
பெங்களூரு:
மாநிலத்தின் அனைத்து அரசு பள்ளிகள், பி.யு.சி., கல்லுாரிகளுக்கும், இலவச மின்சாரம், குடிநீர் வினியோகிக்கும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது.கர்நாடக அரசு, பல்வேறு இலவச திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதுபோன்று, அரசு பள்ளி, கல்லுாரிகளுக்கும் இலவச குடிநீர், மின்சாரம் வழங்கினால் உதவியாக இருக்கும். இதனால் அடிப்படை வசதிகளை அதிகரிக்கலாம் என, நிதித்துறையிடம், கல்வித்துறையிடம் வேண்டுகோள் விடுத்தது. இதற்கு நிதித்துறையும் ஒப்புதல் அளித்தது.பள்ளி கல்வித்துறை, நவம்பர் 1ல் கன்னட ராஜ்யோத்சவா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இதில் பங்கேற்ற முதல்வர் சித்தராமையா, மாநிலத்தின் அனைத்து அரசு பள்ளிகள், கல்லுாரிகளுக்கு இலவச குடிநீர், மின்சாரம் வினியோகிப்பதாக அறிவித் திருந்தார். இதன்படி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு பள்ளிகள், பி.யு.சி., கல்லுாரிகளுக்கு இலவசமாக குடிநீர், மின்சாரம் வழங்க வேண்டும். இதற்கு முன் அந்தந்த பள்ளி, கல்லுாரிகளின் நிர்வகிப்புக்கு அரசு வழங்கும் நிதியுதவியில் இருந்து, குடிநீர் கட்டணம், மின் கட்டணம் செலுத்தப்பட்டது.தற்போது அரசு இலவச குடிநீர், மின்சாரம் வழங்குவதால், பணம் மிச்சமாகும். இந்த பணம், பள்ளிகளை மேம்படுத்தி, மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
