UPDATED : டிச 19, 2023 12:00 AM
ADDED : டிச 19, 2023 09:56 AM
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வழியே அரசு நிரப்புகிறது. இதன்படி, அரசு துறைகளில் வி.ஏ.ஓ., என்ற கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தர் ஆகிய பதவிகளுக்கு, குரூப் - 4 தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.இந்த ஆண்டுக்கான குரூப் - 4 தேர்வு, நவம்பரில் அறிவிக்கப்படும்; பிப்ரவரியில் தேர்வு நடத்தப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., ஆண்டறிக்கையில் கூறப்பட்டுஇருந்தது. ஆனால், ஏற்கனவே அறிவித்த கால அட்டவணைப்படி, தேர்வு அறிவிக்கப்படவில்லை. டிசம்பர் பிறந்து, மூன்றாம் வாரம் ஆன பிறகும் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.ஏற்கனவே, குரூப் - 2 பிரதான தேர்வு, கடந்த பிப்ரவரியில் நடந்த நிலையில், அதன் முடிவுகள் 10 மாதங்களாக இன்றும் வெளியிடப்படவில்லை. ஜனவரி, 12ல் வெளியாகும் என, டி.என்.பி.எஸ்.சி., நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.குரூப் - 4 தேர்வு அறிவிப்பையும் விரைந்து வெளியிட வேண்டும் என, பயிற்சி பெறும் தேர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
