UPDATED : டிச 20, 2023 12:00 AM
ADDED : டிச 20, 2023 10:04 AM
சென்னை:
சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நேற்று நடந்த தெருக்கூத்து நிகழ்ச்சியை, ஆய்வு மாணவர்கள் மெய்மறந்து ரசித்தனர்.செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், தமிழக நாட்டுப்புற மரபுகள் என்ற தலைப்பில், ஆய்வு மாணவர்களுக்கான பயிலரங்கம் நாளை வரை நடக்கிறது. இதில், நேற்று காலை, நாயக்கர் காலக் கலை வரலாற்றுக்கு நாட்டுப்புறவியலின் இன்றியமையாமை என்ற தலைப்பில், பேராசிரியர் பாலுசாமி பேசினார்.அவர் பேசியதாவது:
தமிழகத்தில், 16ம் நுாற்றாண்டு முதல் 18ம் நுாற்றாண்டு வரை நாயக்கர்களின் ஆட்சி நிலவியது. இதில், தமிழர்களின் பண்பாட்டில், இந்த காலத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. அது, கலை வடிவங்களிலும் மாறுதலை ஏற்படுத்தியது. பல்லவர், சோழர், பாண்டியர்களின் செவ்வியல் கலை வடிவங்களில் இருந்து மாறுபட்டதாகவும், பிற்கால மக்களின் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கியதாகவும் அது இருந்தது.அதன் பிரதிபலிப்பை, நாயக்கர் கால கட்டடங்கள், சிற்பங்கள், ஓவியங்களில் காண முடிகிறது. வட மாவட்டங்களில், ராமாயணம், மகாபாரத கதைகள், கர்ண மோட்சம் உள்ளிட்ட சடங்குகள் தெருக்கூத்தில் பிரதிபலித்தன. குறவஞ்சி என்ற இலக்கிய வகை உருவானது. இதிலிருந்து, குறவன் - குறத்தியாட்டம், வேடன் - வேடுவச்சி ஆட்டம் உள்ளிட்ட கலைகள் வளர்ந்தன.இவ்வாறு அவர் பேசினார்.அதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், பல்லக்கச்சேரியைச் சேர்ந்த செல்லியம்மன் நாடகக் குழுவினர் நடத்திய, கணவனைக் காத்த கற்பகவல்லி என்ற நாடகத்தை நடத்தினர். இதில், தாளம், மிருதங்கம், ஹார்மோனியம் உள்ளிட்ட வாத்தியக்கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் என, 20 பேர் பங்கேற்றனர்.மனைவி கற்பகவல்லியின் அன்பை புரிந்துகொள்ளாத கணவன், பரத்தையர் வழிச் செல்கிறான். முருக பக்தையான கற்பகவள்ளி, அவனை திருத்த மன்றாடுகிறாள். ஒரு கட்டத்தில், கணவன் கொலை செய்யப்படுகிறான். இதனால் முருகனிடம் மன்றாட, அவன் எமனிடம் வழிகாட்ட, முருகன், சிவனை கைகாட்ட, சிவன் பிரம்மனை முன்மொழிய என, நடக்காத காரியங்களே நடக்கின்றன. என்றாலும், இறந்த கணவனுக்காக தன் ஆயுளின் பாதியை தந்து, எமனிடம் உயிர்ப்பிச்சை கேட்டு, பெறுகிறாள் கற்பகவள்ளி.இந்த கதையை, பாட்டு, வசனம், நடிப்பு என, 3:30 மணி நேரம் பார்வையாளர்களை தெருக்கூத்து வடிவில், கலைஞர்கள் மாணவர்களை மெய் மறக்க வைத்தனர்.இதுகுறித்து, தெருக்கூத்து கலைஞர் பெரியசாமி கூறியதாவது:
நாட்டுப்புறக் கலைகளில் தனித்துவமானது தெருக்கூத்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய நடுநாட்டில் இந்த கலை வடிவம் பிரபலம். இதில், ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட புராணக்கதைகள், எய்ட்ஸ், கொரோனா விழிப்புணர்வு என சமூகக் கதைகளை நடத்துகிறோம். தென் மாவட்டங்களில் நடத்தும் போது பொதுத்தமிழையும், வட மாவட்டங்களில் வட்டார வழக்கு சொற்களையும் பயன்படுத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
