ஜல்லிக்கட்டில் தந்தை பலி குழந்தைக்கு இலவசக் கல்வி உயர்நீதிமன்றத்தில் அரசு உறுதி
ஜல்லிக்கட்டில் தந்தை பலி குழந்தைக்கு இலவசக் கல்வி உயர்நீதிமன்றத்தில் அரசு உறுதி
UPDATED : டிச 23, 2023 12:00 AM
ADDED : டிச 23, 2023 10:52 AM
மதுரை:
கரூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பார்வையாளராக நின்று கொண்டிருந்த தந்தை ஒருவர் பலியானார். அவரது குழந்தைக்கு பள்ளிக் கல்வியை முடிக்கும்வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உறுதியளிக்கப்பட்டது.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி.மலையில் 2018 ல் ஜல்லிக்கட்டு நடந்தது. காளைகள் வெளியேறும் இடம் அருகே பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கேலரியில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். கூட்டத்திற்குள் புகுந்த ஒரு காளை அவரது வயிற்றில் பாய்ந்தது. காயமடைந்த அவர் இறந்தார். அவருக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். அக்குழந்தையின் தந்தைவழி பாட்டி உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
எனது மகனை மட்டுமன்றி கணவரையும் இழந்த நிலையில் கூலி வேலை செய்கிறேன். குழந்தை தனது தந்தையை மட்டுமன்றி தாயையும் இழந்துள்ளது. குழந்தையை பெற்றெடுத்த பின் வீட்டைவிட்டு தாய் வெளியேறினார். நானும், பேரனும் ஆதரவற்ற நிலையில் உள்ளோம். ஜல்லிக்கட்டில் பார்வையாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதி செய்யவில்லை. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதே விபத்திற்கு காரணம். மருத்துவ வசதிகள் இருப்பதை உறுதி செய்யவில்லை. பேரனை வளர்க்க, கல்வி கற்க ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி கரூர் கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.ஏற்கனவே விசாரணையின்போது நீதிபதி, மனுதாரரின் மகன் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோது காளை முட்டி கொம்பால் குத்தியதில் இறந்ததை அரசு தரப்பு ஒப்புக்கொண்டது. மனுதாரரின் வங்கி கணக்கில் ரூ. 5 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும். குழந்தைக்கு ஏதேனும் ஒரு அரசுப் பள்ளியில் இலவசக் கல்வி வழங்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்:
குழந்தை தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறார். அவர் பள்ளிக் கல்வியை முடிக்கும்வரை இலவசக் கல்வி வழங்கப்படும். இது தொடர்பாக புதுக்கோட்டை கலெக்டருக்கு கரூர் கலெக்டர் கடிதம் அனுப்பியுள்ளார். குழந்தைக்கு இலவசக் கல்வி வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என தமிழக அரசு தரப்பு தெரிவித்தது. இதை பதிவு செய்து கொண்டு வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.
