ஓவிய ஆசிரியர் சஸ்பெண்ட் விவகாரம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் மனு
ஓவிய ஆசிரியர் சஸ்பெண்ட் விவகாரம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் மனு
UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 10:49 AM
கோவை:
ஓவிய ஆசிரியர் ராஜ் குமார், சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது.ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில், ஓவிய ஆசிரியராக பணிப்புரியும் ராஜ்குமார், நேற்று முன் தினம், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் உத்தரவில், பள்ளி ஆசிரியர்களுக்கு எதிரான கருத்துகளை, வெளியில் தெரிவிப்பதாகவும், போலியாக சங்கம் வைத்து, அதன் பெயரில், தவறான தகவல்களை பரப்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்பதற்கான சான்றிதழுடன், பள்ளியில் கடந்த இரு ஆண்டுகளாக வெளியான புகார்கள், அதில் சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை குறிப்பிட்டு, மாவட்ட எஸ்.பி.,அலுவலகத்தில், ஓவிய ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் அவரது மகன் விஜயபிரபாகரன் ஆகியோர், புகார் மனு அளித்துள்ளனர்.முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, தலைமையாசிரியர் (பொறுப்பு) கார்த்திகேயன், உடற்கல்வி இயக்குனர் ரேகா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஓவிய ஆசிரியர் ராஜ்குமார் கூறுகையில், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி,இம்மாதம் 6ம் தேதி, கல்வித்துறை ஆணைகளில், கட்டாயம் தேதி குறிப்பிடவேண்டுமென, உத்தரவு பிறப்பித்துள்ளார். எனக்கு வழங்கப்பட்ட சஸ்பெண்ட் ஆணையில், தேதி இல்லை.தமிழ்நாடு கலையாசிரியர் நலசங்கம், ஒரு பதிவு பெற்ற சங்கம். சஸ்பெண்ட் ஆணையில், குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது. பள்ளியில் பல்வேறு புகார்களுக்கு ஆதாரம் இருந்தும், உரிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை, என்றார்.முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், பள்ளியின் நிர்வாக செயல்பாடுகள், சக ஆசிரியர்களின் தகவல்களை, வெளியில் தெரிவிக்கக் கூடாது. பதிவு பெற்ற சங்கமாக இருந்தாலும், தனிநபர் குறித்த தகவல்களை பரப்புவது, தமிழ்நாடு பணியாளர் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பானது.அடிக்கடி விடுப்பு எடுத்து, பள்ளியில் நடக்கும் விஷயங்களை சங்கத் தின் பெயரில் வெளியிடுவதால், நிர்வாக செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. பள்ளி மேலாண்மை குழு, முன்னாள் மாணவர்களும், புகார் அளித்துள்ளனர், என்றார்.
