சீர்காழியில் தேவார செப்பேடுகள் தொல்லியல் துறையினர் ஆய்வு
சீர்காழியில் தேவார செப்பேடுகள் தொல்லியல் துறையினர் ஆய்வு
UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 10:50 AM
மயிலாடுதுறை:
சீர்காழி கோவிலில் கண்டெடுக்கப்பட்ட தேவார பதிகம் பதித்த செப்பேடுகளை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற சட்டநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் யாகசாலை அமைப்பதற்காக மேற்கு கோபுர வாசல் அருகே ஏப்ரல் 16ம் தேதி பள்ளம் தோண்டிய போது, 23 ஐம்பொன் சிலைகள், 410 முழுமையான தேவார பதிகங்கள் பதித்த செப்பேடுகள், 83 சேதமடைந்த செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன.அவை தற்போது, கோவில் வளாகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று கோவிலுக்கு வந்தனர்.சீர்காழி மண்டல துணை தாசில்தார் ரஜினி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், தருமபுரம் ஆதீன மேலாளர் ரங்கராஜன் ஆகியோர் முன்னிலையில், முதல் கட்டமாக 112 தேவார செப்பேடுகளை கோவில் வளாகத்திலேயே ரசாயனம் கொண்டு சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.அனைத்து செப்பேடுகளும் சுத்தம் செய்யப்பட்ட பின்னர் செப்பேடுகளில் உள்ள தகவல்கள் படி எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும், 10 நாட்கள் இப்பணி நடைபெறும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.இதற்கிடையே, தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருவதை அறிந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட அனைத்தையும் கோவில் வளாகத்திலேயே பாதுகாப்பாக பக்தர்களின் பார்வைக்கு வைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
