அரையாண்டு தேர்வு மையத்தில் அரசு விழா நடந்ததால் பரபரப்பு
அரையாண்டு தேர்வு மையத்தில் அரசு விழா நடந்ததால் பரபரப்பு
UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 05:13 PM
புதுச்சேரி:
அரையாண்டு தேர்வு நடந்த அரசுப் பள்ளி வளாகத்தில் நடந்த மத்திய அரசு விழாவிற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி பள்ளிகளில் கடந்த 8ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி அரும்பார்த்தபுரம், திரு.வி.க அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று காலை தேர்வு எழுத பள்ளிக்கு சென்றனர்.அப்போது, பள்ளி வளாகத்தில், நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற மத்திய அரசு விழாவிற்கு மேடை அமைத்திருந்ததை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஒலி பெருக்கி மூலம் ஒலிபரபரப்பப்பட்டது.மேலும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை வரவேற்க பேண்டு வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. மேலும், விழாவிற்கு வந்த பயனாளிகள் தேர்வு அறைக்கு வெளியில் அமர்ந்து சத்தமாக பேசிக்கொண்டிருந்ததால், மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவித்தனர்.இதனையறிந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளி வளாகத்தில் விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பள்ளி ஆசிரியர்கள், கொம்யூன் அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதையடுத்து மாணவர்களுக்கு தேர்வு முடிந்ததும் விழா நடத்த அதிகாரிகள் முடிவு செய்து, விழாவை ஒத்தி வைத்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் தேர்வு எழுதினர்.
