மாணவர்கள் மத்தியில் பேசும்போது உயிரை விட்ட பேராசிரியர்
மாணவர்கள் மத்தியில் பேசும்போது உயிரை விட்ட பேராசிரியர்
UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 05:14 PM
கான்பூர்:
கான்பூர் ஐஐடியில், முன்னாள் மாணவர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்த பேராசிரியர், மேடையிலேயே மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார்.உ.பி., மாநிலம் கான்பூர் ஐஐடி.,யின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை தலைவராக இருப்பவர் சமீர் கன்டேகர். ஐஐடி வளாகத்தில், நேற்று(டிச.,23) முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சமீர் கன்டேகர் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, மேடையில் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மாரடைப்பு காரணமாக ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள், தெரிவித்தனர்.கான்பூர் ஐஐடியின் முன்னாள் இயக்குநர் அபய் கரன்திகர் கூறுகையில் சமீர் கன்டேகர் மிகச்சிறந்த பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர். மேடையில் பேசிக் கொண்டு இருந்த போது, நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனை மற்றவர்கள் கவனிக்கும் முன்னர், மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது மகன் பிரவாக் கன்டேகர், கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்து வருகிறார். அவர் வந்த பிறகு தான் இறுதிச்சடங்கு நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
