கல்வி, சுகாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி; மத்திய அமைச்சர் மகிழ்ச்சி
கல்வி, சுகாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி; மத்திய அமைச்சர் மகிழ்ச்சி
UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 10:03 PM
சென்னை:
நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் என, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பேசினார்.சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லுாரியில், லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சி, நடந்தது. இதையடுத்து, விக்ஷித் பாரத் சங்கல்ப் யாத்ராவை, அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கொடியசைத்து துவங்கி வைத்தார். சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பேசியதாவது:
மத்திய அரசின் திட்டங்களை, மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், விக்ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா உதவும். இந்த யாத்திரை நாடு முழுதும் 2.69 பஞ்சாயத்துகளிலும் செல்லும். மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், மை பாரத் என்ற போர்ட்டல் துவங்கப்பட்டது. இதில், நாடு முழுதும், 30 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.கடந்த, 2014ல் ஏழாக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனைகள், தற்போது 22 ஆகவும், 362 ஆக இருந்த மருத்துவ கல்லுாரிகள், 700 ஆகவும் உயர்ந்துள்ளன. 1.40 லட்சம் கி.மீட்டராக இருந்த நெடுஞ்சாலை, 2.30 லட்சம் கி.மீ., ஆக உயர்ந்துள்ளது.அதேபோல், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், 500க்கும் குறைவாக இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கையில், உலகில் 3வது பெரிய நாடாக மாறி உள்ளது. 18 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச தானியங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.இறக்குமதிகள் குறைக்கப்பட்டு, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உற்பத்தி அதிகரிக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகில் 46 சதவீத அளவுக்கு, டிஜிட்டல் பேமென்ட்கள் இந்தியாவில் தான் நடக்கின்றன.உலகில் 5வது பெரிய பொருளாதார நாடாக, இந்தியா உள்ளது. விரைவில், 3வது இடத்திற்கு முன்னேறும். பொருளாதார உள்கட்டமைப்பு மட்டுமின்றி, சமூக உள்கட்டமைப்பிலும், மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த இரண்டையும், ஒருசேர முன்னேற்றுவதன் வாயிலாகவே, உண்மையான வளர்ச்சியை எட்ட முடியும் என்பது, பிரதமரின் நம்பிக்கை. இவ்வாறு அவர் பேசினார்.பின்னர், மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில், மாணவி ஒருவர், நாட்டில் இடஒதுக்கீடு முறை இன்னும் தேவையா? என, கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் அனுராக் சிங் தாகூர், நாட்டில் ஏழை, எளிய மக்கள் முன்னேற்றத்திற்கு இடஒதுக்கீடு முறை இன்னும் தேவையாக இருக்கிறது. சில அரசியல் கட்சிகள், மதம், ஜாதி, இனம் ரீதியாக மக்களை பிரிக்க முயற்சிக்கின்றனர். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து, நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும், என்றார்.
