கதிரியக்க பாதுகாப்பு கவச உடை: மதுரை டாக்டருக்கு காப்புரிமை
கதிரியக்க பாதுகாப்பு கவச உடை: மதுரை டாக்டருக்கு காப்புரிமை
UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 10:25 PM
மதுரை:
கதிரியக்க துறைகளில் பணிபுரியும் டாக்டர், நர்ஸ்கள் பயன்படுத்தும் காரீய பாதுகாப்பு கவச உடைக்கு மாற்றாக, எடை குறைவான கவச உடையான, ஏப்ரன் உருவாக்கிய மதுரை அரசு மருத்துவமனை புற்றுநோய் உதவி பேராசிரியர் செந்தில்குமாருக்கு, மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது.நுரையீரல் புற்றுநோய்க்கு துல்லிய கதிரியக்க சிகிச்சை அளிக்கும் கருவி, புற்றுநோய்க்கு மட்டும் துல்லிய கதிரியக்க சிகிச்சை அளிக்கும் கருவி என, 50க்கும் மேற்பட்ட கருவிகளை டாக்டர்செந்தில்குமார் கண்டுபிடித்துள்ளார். இவர், 200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து, 40 விருதுகள் பெற்றுள்ளார். தற்போது, ஏப்ரன் உருவாக்கியுள்ளார்.இதற்கு மத்திய அரசின் காப்புரிமை பெற்றது குறித்து அவர் கூறியதாவது:
பிஸ்மத், ஆன்டிமனி, பேரியம் சல்பேட் கலவையை, பாலிமர் உடன் சேர்த்து இரண்டடுக்கில் இலகுவான எக்ஸ்ரே கவசம் கண்டுபிடித்துள்ளேன். வழக்கமான காரீய ஏப்ரனை விட, 20 சதவீதம் எடை குறைவாக உள்ளது. இது, 25 சதவீதம் கூடுதல் பாதுகாப்பை தருவதோடு, குறைந்த விலையிலும் கிடைக்கும்.காரீயத்தை காட்டிலும், பிஸ்மத் தனிமம் அதிக அணுஎண் கொண்டது. பேரியம் சல்பேட், ஆன்டிமனி குறைந்த அணுஎண் பொருட்கள். இவற்றை அதிக மீள்தன்மை கொண்ட பாலிமருடன் கலந்ததால், ஒரு ஏப்ரனை மூன்றாண்டுகளுக்கு மேல் பயன்படுத்தலாம்.தினமும் கதிரியக்க துறைகளில் பணிபுரியும் டாக்டர், நர்ஸ் உள்ளிட்ட பணியாளர்களுக்கு இந்த ஏப்ரன் உதவும். வளையும் தன்மை உள்ளதால் எளிதாக மடித்து வைக்கலாம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை. மறுசுழற்சிக்கு உகந்தது.இந்த கவச உடை அணிந்தால், டாக்டர்கள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கு ஊழியர்களை கதிரியக்க பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம். முதல் முறையாக இந்தியாவில் இந்த ஏப்ரன் தயாரித்துள்ளேன். இவ்வாறு அவர்கூறினார்.மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் கூறுகையில், எங்கள் மருத்துவமனை டாக்டர், நர்ஸ்களுக்காக, 50 ஏப்ரன்கள் தயாரிப்பார். அதன் பின் ஏதாவது ஒரு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளார், என்றார்.
