UPDATED : டிச 25, 2023 12:00 AM
ADDED : டிச 25, 2023 10:05 AM
ஷிவமொகா:
அடுத்தாண்டு முதல் 1 முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு மேஜை, நாற்காலி வசதிகள் செய்து தரப்படும், என தொடக்க கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.ஷிவமொகாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இனி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தரையில் அமர்ந்து பாடம் படிக்க வேண்டாம். அடுத்தாண்டு அல்லது அதற்கு அடுத்தாண்டு, அனைத்து மாணவர்களும் மேஜை, நாற்காலியில் அமர்ந்து பாடம் படிக்கலாம்.பள்ளியின் வேலைகளை, மாணவர்களை வைத்து செய்வது குற்றமாகும். இதுபோன்று நடந்தால், புகார் அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுவரை 13 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 43 ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்.காங்கிரஸ் அரசின் வாக்குறுதியான வேலையில்லா பட்டதாரிகளுக்கான யுவ நிதி திட்டம், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12ம் தேதி, ஷிவமொகாவில் சுதந்திர பூங்காவில் துவங்கப்படும். இதற்கான பெயர் பதிவு பணிகள் வரும் 26ம் தேதி முதல் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
