தகர கொட்டகையில் செயல்படும் பள்ளிகள்: கணக்கெடுக்க உத்தரவு
தகர கொட்டகையில் செயல்படும் பள்ளிகள்: கணக்கெடுக்க உத்தரவு
UPDATED : டிச 25, 2023 12:00 AM
ADDED : டிச 25, 2023 10:08 AM
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில், 60,000 பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 8,400 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 13,000 தனியார் சுயநிதி பள்ளிகளும் அடக்கம். தனியார் பள்ளிகளுக்கு, மழலையர் பள்ளி, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் என்றும்; நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் என்றும், பல்வேறு அங்கீகாரங்கள் வழங்கப்படுகின்றன.இந்த அங்கீகாரங்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்படும். அங்கீகார நீட்டிப்புக்கு முன், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் போதிய வசதிகள் உள்ளதா; உள் கட்டமைப்புகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா; மாணவர் சேர்க்கை நிலை என்ன; ஆசிரியர்களின் பணியிடங்கள் ஆகியவை குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் குழு ஆய்வு செய்வது வழக்கம்.கும்பகோணத்தில், 2004ம் ஆண்டு தனியார் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்துக்குப் பின், பள்ளிகளின் கட்டடங்கள் அனைத்தும், கான்கிரீட் மேற்கூரை பள்ளிகளாகவே இருக்க வேண்டியது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில், பள்ளிகள் கட்டமைப்புகள் குறித்து நடந்த ஆய்வுகளில், பல மாவட்டங்களில் உள்ள சில தனியார் பள்ளிகளில், முன்பக்க வகுப்பறைகள் நல்ல கான்கிரீட் கட்டடத்திலும், பின்புற வகுப்பறைகள் தகர கொட்டகை போன்ற கட்டடங்களிலும் செயல்படுவது தெரியவந்துள்ளது.இவ்வாறு கண்டறியப்பட்ட பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை சார்பில், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்புக்கு பிரச்னை ஏற்படாமல் தவிர்க்க, இதற்கு துவக்கத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.இதற்காக, மாவட்ட வாரியாக தகர கொட்டகை பள்ளிகளின் விபரங்களை சேகரிக்கும் பணி துவங்கி உள்ளது. பட்டியலில் இடம் பெறும் பள்ளிகள், வகுப்பறை கட்டடங்களை விதிகளுக்கு ஏற்ப அமைத்தால் மட்டுமே, அங்கீகாரம் வழங்கவும், அதுவரை அங்கீகாரத்தை நிறுத்தி வைக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
