பழமையான ஓவியங்களை பாதுகாக்க ஓவியர் மணியம் விழாவில் பேச்சு
பழமையான ஓவியங்களை பாதுகாக்க ஓவியர் மணியம் விழாவில் பேச்சு
UPDATED : டிச 29, 2023 12:00 AM
ADDED : டிச 29, 2023 10:12 AM
சென்னை:
ஆயிரம் விளக்கு சென்னை ஆயிரம் விளக்கு, லலித் கலா அகாடமியில் ஓவியர் மணியம் நுாற்றாண்டு விழா நடந்தது.விழாவை, இசையமைப்பாளர் இளையராஜா துவக்கி வைத்து அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த மணியம் வரைந்த ஓவியங்களை பார்வையிட்டார். பெரும்பாலும், கல்கி இதழில் மணியம் வரைந்த பல்வேறு அட்டை படங்கள் மற்றும் பொன்னியின் செல்வன் நாவலுக்கு வரையப்பட்ட படங்கள் இடம்பெற்றிருந்தன.ஒவ்வொரு படத்திற்கான சிறப்பு அம்சங்களை, மணியம் மகன் மணியம் செல்வன், விளக்கி கூறினார். இந்த அரங்கில், மணியம் செல்வன் வரைந்த ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக நடிகரும், ஓவியரும், பல்துறை வித்தகருமான சிவகுமார் மற்றும் விகடன் குழும நிர்வாக இயக்குனர் சீனிவாசன், கலை இயக்குனர் தோட்டா தரணி ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுக்கு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.சீனிவாசன் பேசியதாவது:
கடந்த 82 ஆண்டுகள், இரு தலைமுறைகளாக ஓவியம் வரைவது என்பது பெரிய விஷயம். அந்த ஓவியங்களை பாதுகாப்பது, அதைவிட பெரியது. விகடனுக்கு மணியம் வரைந்த அசல் ஓவியங்களை, மணியம் செல்வன் கேட்டு பெறுவார். அப்போது எனக்கு தெரியவில்லை. இந்த அரங்கில் பார்க்கும் போது தான் தெரிகிறது. எத்தனை ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.இளையராஜா பேசியதாவது:
நான் அதிகமாக பாட்டுக்கு இசையமைத்த ஹீரோ சிவகுமார் தான். நானும், அன்னக்கிளி படம் முதல் 42 ஆண்டுகள் வரையிலான மெட்டுகளின் குறிப்புகளை தேடுகிறேன். ஆனால் கிடைக்கவில்லை.இங்கு, 82 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளன. கல்கியில் வந்த மணியம் ஓவியங்கள் தான் என் கற்பனையை துாண்டிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.ஜன., 3ம் தேதி வரை, காலை 11:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது.