கல்வி கடன் வழங்க வங்கிகள் தயக்கம்; தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஏக்கம்
கல்வி கடன் வழங்க வங்கிகள் தயக்கம்; தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஏக்கம்
UPDATED : டிச 29, 2023 12:00 AM
ADDED : டிச 29, 2023 10:14 AM
கோவை:
தமிழகத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவ - மாணவியருக்கு கல்வி கடன் வழங்க, வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன. அதனால், விண்ணப்பித்தவர்களில், இதுவரை, 14 சதவீதத்தினருக்கே கடன் கிடைத்திருக்கிறது.தமிழகத்தில் உயர் கல்வி கற்கச் செல்லும் மாணவ, மாணவியருக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, வித்யாலட்சுமி என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டு, கல்வி கடன் வழங்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தபின் படிக்கக் கூடிய சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, கலை அறிவியல் படிப்பு மற்றும் தொழிற்கல்வி படிக்க கடன் வழங்கப்படுகிறது. கல்வி கடன் பெற ரூ.4 லட்சம் வரை எவ்வித பிணையமும் கொடுக்க தேவையில்லை. ரூ.4 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை மூன்றாம் நபர் உத்தரவாத கையெழுத்து மட்டும் போதும். ரூ.7.50 லட்சத்துக்கு மேல் கடன் தொகைக்கு இணையான, சொத்து பிணையம் கொடுக்க வேண்டும்.படிப்பு முடித்த ஓராண்டுக்கு பின், கல்வி கடனை, 120 மாத தவணையில் திருப்பிச் செலுத்தலாம். இதன்படி, மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 47 ஆயிரத்து, 907 மாணவ - மாணவியரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.இதில், 2,717 நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன. நிதியாண்டு துவங்கியதில் இருந்து தற்போது வரை, 6,631 பேருக்கே கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது, விண்ணப்பித்தோரில், 14 சதவீதம் மட்டுமே. இன்னும், 15 ஆயிரத்து, 226 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சமர்ப்பிக்கும் நிலையில் உள்ளன. 4,735 மாணவர்களுக்கு கடன் வழங்க, அப்ரூவல் வழங்கும் சூழலில் இருக்கிறது.அதாவது, 38 ஆயிரத்து, 559 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. நிதியாண்டு முடிய மூன்று மாதங்களே இருக்கின்றன. அதற்குள் கல்வி கடன் கிடைக்குமா என்கிற ஏக்கம், மாணவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், கூடுதல் கவனம் செலுத்தியதால், சென்னையில், 1,145, கோவையில், 808, சேலத்தில், 345 பேருக்கு கடன் வழங்கப்பட்டு உள்ளது.அதேநேரம் நாகபட்டினத்தில் - 21, மயிலாடுதுறையில் - 32, கள்ளக் குறிச்சியில் - 36 பேருக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான வங்கிகள் கல்வி கடன் வழங்க தயக்கம் காட்டுகின்றன.இதுதொடர்பாக, வங்கியாளர்கள் சிலர் கூறியதாவது:
அரசு தரப்பில், பிணையமின்றி கல்விக்கடன் வழங்கச் சொல்கின்றனர். கடன் பெறுவோரில், 90 சதவீதத்தினர் திருப்பிச் செலுத்துவதில்லை. நல்ல சம்பாத்தியத்துடன் வேலையில் சேர்ந்த பிறகும் கூட, கல்விக்கடனை செலுத்த முயற்சிப்பதில்லை.நேர்மையாக இருக்க வேண்டும் என நினைப்போர் மட்டுமே அக்கறையுடன் செலுத்த முன்வருகின்றனர். இல்லையெனில், சிபில் கோர் பிரச்னை வரும்போது, நெருக்கடி ஏற்பட்டால் மட்டும் மொத்தமாக பணத்தைச் செலுத்தி, கணக்கை முடிக்கின்றனர். கடன் தொகை திரும்பி வராமல் முடங்குவதாலேயே, வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.