UPDATED : டிச 29, 2023 12:00 AM
ADDED : டிச 29, 2023 10:37 AM
செங்கல்பட்டு:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், ஐந்தாவது ஆண்டாக மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து புத்தக கண்காட்சியை நடத்தி வருகிறது.செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகில் உள்ள அலிசன் காசி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், புத்தக திருவிழா நேற்று துவங்கி, ஜன., 4ம் தேதி வரை நடக்கிறது. தினமும், பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதன் துவக்க விழா, மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி தலைமையில், நேற்று நடந்தது.இதில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார். இதில், கூடுதல் கலெக்டர் அனாமிகா, எம்.பி., செல்வம், செங்கல்பட்டு தி.மு.க., எம்.எல்.ஏ., வரலட்சுமி, திருப்போரூர் வி.சி., எம்.எல்.ஏ., பாலாஜி, நகரமன்ற தலைவர் தேன்மொழி, துணை தலைவர் அன்புச்செல்வன், வனக்குழு தலைவர் திருமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.புத்தக கண்காட்சியில், 60 அரங்குகளில் லட்சக்கணக்கான நுால்கள் இடம்பெற்றுஉள்ளன. இதில், தினமலர் விற்பனை நிலையத்தில், அமைச்சர் அன்பரசன், புத்தகங்களை பார்வையிட்டு, சோழர்கள் இன்று புத்தகத்தை வாங்கினார். கண்காட்சியை பார்வையிட இலவச அனுமதி, மாவட்ட நிர்வாகம் வழங்கி உள்ளன.இரண்டாம் நாளான இன்று, கூடுதல் கலெக்டர் அனாமிகா தலைமையில் நடக்கிறது. அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பேசுகிறார். இதில், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம்.