பொதுத்தேர்வுக்கு 100 சதவீத வருகை: தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு
பொதுத்தேர்வுக்கு 100 சதவீத வருகை: தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு
UPDATED : டிச 29, 2023 12:00 AM
ADDED : டிச 29, 2023 10:39 AM
கோவை:
பள்ளி தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி, பொதுத்தேர்வில் கட்டாயம் பங்கேற்க செய்து, 100 சதவீத வருகைப்பதிவுக்கு உறுதி செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த அரையாண்டு தேர்வுக்கு, முழு பாடத்திட்டத்தில் இருந்தும், வினாக்கள் இடம்பெற்றன. விடுமுறை முடிந்து, ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.பொங்கலுக்கு முன்பே, முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் இருந்து செய்முறை பொதுத்தேர்வு நடப்பதால், பள்ளிகளில் இனி பொதுத்தேர்வு தயாரிப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.குறிப்பாக, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களின் பெற்றோரை அழைத்து, கவுன்சிலிங் வழங்கி, பொதுத்தேர்வில் விடுப்பு இன்றி பங்கேற்க ஆவன செய்ய வேண்டும். கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி, 100 சதவீத தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கடந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில், 50 ஆயிரம் மாணவர்கள், ஆப்சென்ட் ஆன விவகாரம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனவே, வரும் பொதுத்தேர்வில், 100 சதவீத வருகைப்பதிவு உறுதி செய்ய தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மேலாண்மை குழு உதவியோடு, பெற்றோரை அணுகி, மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி, பொதுத்தேர்வு எழுத செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை, பள்ளி வாரியாக, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது என தலைமையாசிரியர்கள் கூறினர்.