சித்த மருத்துவத்தை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர்
சித்த மருத்துவத்தை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர்
UPDATED : டிச 31, 2023 12:00 AM
ADDED : டிச 31, 2023 11:14 AM
மதுரை:
கொரோனா காலகட்டத்தில் சித்த மருத்துவத்தின் பயன்பாடு சிறப்பாக இருந்தது. அதைப்போல தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு மதுரையில் நடந்த கருத்தரங்கில் மத்திய அமைச்சர் முன்ஞ்பரா மகேந்திரபாய் கலுபை தெரிவித்தார்.மத்திய அமைச்சர் சிறப்பு மலரை வெளியிட இந்திய மருத்துவ இயக்குநரக கமிஷனர் மைதிலி பெற்றுக் கொண்டார். ஆயுஷ் அமைச்சக இணைச் செயலர் கவிதா கர்க், தேசிய சித்தா நிறுவன இயக்குநர் மீனாகுமாரி, முதல்வர் மீனாட்சிசுந்தரம், கண்காணிப்பாளர் கிறிஸ்டியன், என்.சி.ஐ.எஸ்.எம்., தலைவர் ஜெகநாதன், யுனானி ஆராய்ச்சி கவுன்சில் டைரக்டர் ஜெனரல் ஜாகிர் அகமது கலந்து கொண்டனர்.மத்திய அமைச்சர் பேசியதாவது:
கொரோனா தொற்றின் போது நோயாளிகளை குணப்படுத்தியதில் சித்தமருத்துவம் முக்கிய பங்காற்றியுள்ளது. சித்தமருத்துவத்துறையில் பாரம்பரிய முறைகளை மீண்டும்ஆராய்ச்சி செய்து புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும். அறியப்படாத நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கேற்ப பாடத்திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும்.பிரதமர் மோடி ஆயுஷ் மருத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். சென்னையில் உள்ள தேசிய சித்தா நிறுவனம் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குகிறது. வர்மம், தொக்கனம், எண்ணெய் குளியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும் 2000 பேர் சிகிச்சை பெறுகின்றனர். சித்தாவிற்கான மத்திய ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் தமிழகம், கேரளா, கர்நாடகம், புதுச்சேரி, டில்லியில் 11 யூனிட்கள் சிறப்பாக செயல்படுகின்றன. சென்னையில் உள்ள தேசிய சித்த நிறுவனத்திற்கு தமிழக அரசும் சிறப்பாக உதவி வருகிறது என்றார்.300க்கும் மேற்பட்ட அரியவகை மூலிகை, மருத்துவக்குணம் நிறைந்த செடிகள் பெயர்களுடன் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன.