கழிப்பறை சென்று வந்தால் மீண்டும் கம்ப்ளீட் செக்கப்! ஜே.இ.இ., தேர்வு
கழிப்பறை சென்று வந்தால் மீண்டும் கம்ப்ளீட் செக்கப்! ஜே.இ.இ., தேர்வு
UPDATED : ஜன 04, 2024 12:00 AM
ADDED : ஜன 04, 2024 09:55 AM
புதுடில்லி:
ஜே.இ.இ., மெயின் தேர்வு எழுதும் இடைவெளியில் கழிப்பறைக்கு செல்லும் மாணவர்கள் தேர்வு அறைக்கு திரும்பும் போது மீண்டும் ஒருமுறை பயோ மெட்ரிக் வருகை பதிவு செய்த பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.நாடு முழுதும் உள்ள என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம், ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை இந்த தேர்வுகளை நடத்துகிறது. நடப்பு ஆண்டுக்கான ஜே.இ.இ., மெயின் தேர்வு, வரும் 24 முதல், பிப்., 1 வரை நடக்கிறது. முடிவுகள் பிப்., 12ல் வெளியாகின்றன. இந்த தேர்வை எழுத, 12.30 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்தாண்டுக்கான இரண்டாவது ஜே.இ.இ., மெயின் தேர்வு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது.இந்நிலையில், தேசிய தேர்வு முகமை இயக்குனர் சுபோத் குமார் சிங் நேற்று கூறியதாவது:
ஜே.இ.இ., மெயின் தேர்வு எழுத வரும் தேர்வர்கள், தேர்வு மையத்திற்குள் நுழையும் போது, முழுவதுமாக பரிசோதிக்கப்பட்டு, பயோ மெட்ரிக் வருகை பதிவு செய்த பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.இனி, அவர்கள் தேர்வு இடைவெளியில் கழிப்பறைக்கு சென்று திரும்பும் போது, மீண்டும் ஒருமுறை முழு பரிசோதனை செய்யப்பட்டு, பயோ மெட்ரிக் பதிவு செய்த பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர்.இது, தேர்வர்கள் மட்டுமின்றி, அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் சிற்றுண்டி வினியோகம் செய்யும் ஊழியர்களுக்கும் பொருந்தும். தேர்வு முறைகேடுகளை தவிர்ப்பதற்காக இந்த கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மற்ற போட்டி தேர்வுகளிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.