சிவில் நீதிபதி தேர்வு முடிவு டி.என்.பி.எஸ்.சி., மெத்தனம்
சிவில் நீதிபதி தேர்வு முடிவு டி.என்.பி.எஸ்.சி., மெத்தனம்
UPDATED : ஜன 04, 2024 12:00 AM
ADDED : ஜன 04, 2024 09:31 AM
சென்னை:
உரிமையியல் நீதிமன்றங்களில், சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வு முடிவை தாமதமின்றி வெளியிட கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் உரிமையியல் நீதிமன்றங்களில், உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக இருந்த, 245 இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், முதல்நிலை தகுதி தேர்வு, கடந்த ஆண்டு ஆகஸ்ட், 19ல் நடந்தது.இதில், 12,000 பேர் பங்கேற்றனர். இதற்கான ரிசல்ட், கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியானது. அதில், 2,500 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு, பிரதான தேர்வு, நவ., 4 மற்றும், 5ம் தேதிகளில் நடந்தது.இதன் முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், டிசம்பர் கடந்த பிறகும் தேர்வு முடிவு அறிவிக்கப்படவில்லை. இதனால், தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதுகுறித்து, தேர்வர்கள் கூறியதாவது:
உரிமையியல் நீதிபதி பணியிடத்துக்கான தேர்வு, ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன் நடத்த வேண்டும். கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, மிக தாமதமாகவே நடந்தது. அதனால், இந்த தேர்வு எழுத திட்டமிட்டிருந்த பட்டதாரிகள், 3 ஆண்டாக பயிற்சி மட்டுமே எடுத்து கொண்டிருந்தனர்.மூன்று ஆண்டுக்கு பின் தேர்வு நடத்தப்பட்ட பிறகும், ரிசல்ட் வெளியிட தாமதமாகிறது. விரைந்து வெளியிட, டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.