UPDATED : ஜன 06, 2024 12:00 AM
ADDED : ஜன 06, 2024 05:43 PM
ஊட்டி:
ஊட்டியில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு ஒரு பயிற்சி களமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊட்டி அருகே காந்தளில், அதி நவீன வசதிகளுடன் நுாலகம் மற்றும் அறிவுசார் மையம், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. கட்டுமான பணிகள் சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது, நேற்று, மாநில முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சியின் மூலம் சென்னையில் இருந்து திறந்து வைத்தார். நேற்று, முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.தமிழ், ஆங்கில நாளிதழ், இலக்கியம், நாவல் புத்தகங்கள், பொது அறிவு, தேசிய அளவிலான போட்டி தேர்வுகள், நீட் பயிற்சி மையம் உட்பட ஏராளமான வசதிகள் இந்த அறிவுசார் மையத்தில் படிப்படியாக ஏற்படுத்தப்பட உள்ளது. தற்போது, 2,500 புத்தகங்கள் இருப்பில் உள்ளன.குறிப்பாக, கல்லுாரி படிப்பு முடிக்கும் இளைஞர்களுக்கு அரசு பணி என்பது ஒரு பெரும் கனவாக உள்ளது. அந்த கனவு நிறைவேற வசதி படைத்தவர்கள் தனியார் போட்டி தேர்வு பயிற்சி மையங்களுக்கு சென்று தயாராகின்றனர்.வசதி இல்லாத பொருளாதாரத்தில் பின் தங்கிய இளைஞர்கள் வீட்டில் இருந்தபடியே எவ்வித பயிற்சியும் இல்லாமல் சுயமாக படிக்கின்றனர். அதில், கடந்த கால போட்டி தேர்வு வினாத்தாள்கள் மட்டுமே அவர்களுடைய ஒரே துருப்பு சீட்டாக உள்ளது.தற்போது, இந்த அறிவுசார் மையத்தில் அரசு வேலைக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் இந்த அறிவு சார் மையத்தில் பயிற்சி, போட்டி தேர்வுக்கான அனைத்து வகை புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன.போட்டி தேர்வுக்கு தேவையான புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள இணைய வசதியுடன், 6 கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் ஸ்மார்ட்போர்டு பயன்படுத்தி பயிற்சி அளிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.சந்தேகங்களை இணையவழி மூலம் நிவர்த்தி செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கலெக்டர் அருணா கூறுகையில், இந்த நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு ஒரு பயிற்சி களமாக உள்ளது. இளைஞர்கள், மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றார்.ஊட்டி நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் இளங்கோவன், மண்டல செயற்பொறியாளர் பாலசந்திரன், மாவட்ட நுாலக அலுவலர் வசந்த மல்லிகா, நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார், கவுன்சிலர் அபுதாகிர் உட்பட பலர் பங்கேற்றனர்.