UPDATED : ஜன 07, 2024 12:00 AM
ADDED : ஜன 07, 2024 10:53 AM
புதுச்சேரி:
பள்ளி பாட புத்தகங்களை தாண்டி மற்ற விஷயங்களை பார்த்து கற்று கொள்வோர் வாழ்க்கையில் வெற்றி பெறுவர் என, ஆச்சாரியா கல்வி குழும நிர்வாக இயக்குனர் அரவிந்தன் பேசினார்.தினமலர்-பட்டம் இதழ் மெகா வினாடி வினா இறுதி போட்டி பரிசளிப்பு விழாவில் அவர், பேசியதாவது:
வினாடி வினா போட்டிக்கு 6 மாத பட்டம் இதழை படித்து தயார்படுத்தி கொண்டு வருவது சாதாரண விஷயம் அல்ல. 30 ஆயிரம் மாணவர்களில், தேர்வாகி இங்கு வந்துள்ள அனைத்து மாணவர்களும் வெற்றியாளர்களே. உங்களை பார்த்து உங்கள் பள்ளி பெருமைப்படும்.இது நல்ல களம். புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் என்னை வளர்த்து கொள்ள பெரிய அளவில் உதவியது. யாரெல்லாம் பள்ளி பாட புத்தகங்களை தாண்டி மற்ற விஷயங்களை பார்த்து கற்று கொள்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது.பட்டம் இதழில் உலகின் உள்ள அனைத்து விஷயங்களை பழச்சாறு போல மாணவர்களிடம் கொண்டு வந்து சேர்க்கின்றனர். பட்டம் இதழை தினசரி படிக்கும் போது எதிர்காலத்தில் எந்த பணிக்கு சென்றாலும் பொது அறிவு பயன்படும். அதை எப்படி படிக்க வேண்டும் என்பதை இந்நிகழ்ச்சியை பார்க்கும்போது தெரிந்து கொள்ள முடியும்.உயர்ந்த இடத்திற்கு செல்ல மூன்று விஷயங்கள் தேவை. அதில், முதலில் எந்த விஷயத்தையும் எளிதாக புரிந்து கொள்ளும் திறன். போட்டியில் கேள்விகள் அனைத்தும் எளிமையாக இருந்தாலும், சிறிய சிக்கல் இருந்தது. அதை எளிதாக புரிந்து கொண்டு பதில் கூறும் நுண்அறிவு தான் வெளிப்பட்டது. இரண்டாவது உடனுக்குடன் பதில் அளிக்கும் திறன். இந்த திறனை வளர்த்து கொள்ள வினாடி வினா களம் சிறப்பானது. மூன்றாவது ஒரு திட்டத்தை முழுமையாக ஒருங்கிணைக்கும் திறன். வாழ்க்கையில் வெற்றி பெற இந்த மூன்று விஷயங்களும் தேவை.இந்த மூன்று விஷயத்தையும் வினாடி வினா களத்தில் பார்த்தேன். எல்லா பள்ளி மாணவர்களையும் சேர்த்து, பட்டம் வினாடி வினா போட்டி மூலம் மாலையாக கோர்த்து கொண்டு வந்த தினமலர் நாளிதழுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மாணவர்களை நாசாவுக்கு அனுப்புவது மிகப்பெரிய விஷயம். அதுதவிர ஏராளமான பரிசுகளை கொடுத்து மாணவர்களை அங்கீகரித்துள்ளனர்.மாணவர்களை ஒன்று சேர்த்து படிக்க வைத்து, புரிதல் கொடுத்து தயார்படுத்திய தினமலர் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்துடன் இணைந்து கொண்ட ஆச்சாரியா கல்வி குழுமத்திற்கும் என் வாழ்த்துகள். இதுபோன்ற களங்களை மேலும் பல கொண்டுவர வேண்டும் என்றார்.