உயர்கல்வியில் ஏ.ஐ., தாக்கம்: ஆசிரியர்களுக்கு பயிற்சி
உயர்கல்வியில் ஏ.ஐ., தாக்கம்: ஆசிரியர்களுக்கு பயிற்சி
UPDATED : ஜன 07, 2024 12:00 AM
ADDED : ஜன 07, 2024 05:07 PM
கோவை:
தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள் சங்கம் சார்பில், உயர்கல்வியில் ஏ.ஐ., மற்றும் டேட்டா அனலிடிக்ஸ் என்ற, ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கு டாக்டர் எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது.இதல், தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள் சங்க மாநில தலைவர் அஜீத்குமார் லால் மோகன் பேசுகையில், உயர்கல்வியில் ஏ.ஐ., டேட்டா அனலிடிக்ஸ் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதற்கேற்ப ஆசிரியர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது கட்டாயமாகியுள்ளது.இதற்காக, சங்கம் தரப்பில் நிர்வாகம் மற்றும் மேலாண்மை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. தனியார், அரசு உதவி பெறும் கல்லுாரி முதல்வர்கள், துறைத்தலைவர்களுக்கு பயிற்சி வழங்க நிதியுதவி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.இப்பயிற்சி கருத்தரங்கில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் கற்றல்- கற்பித்தலில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்து வல்லுநர்கள் விளக்கமளித்தனர். சங்க செயலாளர் சேதுபதி, எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கல்லுாரி செயலர் நளின் விமல் குமார், காமதேனு கல்லுாரி இணைச்செயலர் மலர், வைஸ் ஒர்க் நிறுவன சி.இ.ஓ., மதன்குமார் சீனிவாசன், இணை நிறுவனர் சிவராம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.