UPDATED : ஜன 07, 2024 12:00 AM
ADDED : ஜன 08, 2024 08:54 AM
பெங்களூரு:
நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வந்த கவுரவ பேராசிரியர்களின் சம்பளத்தை, அனுபவத்தின் அடிப்படையில் 5,000 முதல் 8,000 ரூபாய் வரை உயர்த்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.பெங்களூரில் முதல்வரின் அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் நேற்று கவுரவ பேராசிரியர்கள் குழுவினர், உயர்கல்வி துறை அமைச்சர் அமைச்சர், முன்னாள் எம்.எல்.சி., புட்டண்ணா ஆகியோருடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.அப்போது முதல்வர் பேசியதாவது:
கவுரவ பேராசிரியர்கள் மீது எங்கள் அரசுக்கு அக்கறை உள்ளது. ஆனால் சட்டச் சிக்கல்களால் சேவை பாதுகாப்பு வழங்க முடியாது. இதற்காக, நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், குரல் எழுப்பினேன்.உங்களின் கோரிக்கைகளை அரசு அக்கறையுடன் பரிசீலித்து உள்ளது. ஐந்தாண்டுகளுக்கு கீழ் பணி புரிந்வோருக்கு 5,000 ரூபாயும்; ஐந்து முதல் 10 ஆண்டுகள் பணிபுரிந்வோருக்கு 6,000 ரூபாயும்; 10 முதல் 15 ஆண்டுகள் பணிபுரிந்வோருக்கு 7,000 ரூபாயும்; 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோருக்கு 8,000 ரூபாயும் வழங்கப்படும்.அதுமட்டுமின்றி, கவுரவ பேராசிரியர்களின் ஆரோக்கியத்துக்காக ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு; 60 வயதுக்கு பின் அதிகபட்சமாக பாதுகாப்பு தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.மாதத்தில் ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்படும். பெண் கவுரவ பேராசிரியர்களுக்கு ஊதியத்துடன் மூன்று மாதம் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று, பணியில் சேர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.