ஜல்லிக்கட்டு காளையின் கொம்புகளுக்கு ரப்பர் கவசம்; பொறியியல் இளைஞரின் புதிய முயற்சி
ஜல்லிக்கட்டு காளையின் கொம்புகளுக்கு ரப்பர் கவசம்; பொறியியல் இளைஞரின் புதிய முயற்சி
UPDATED : ஜன 08, 2024 12:00 AM
ADDED : ஜன 08, 2024 09:32 AM
மதுரை:
ஜல்லிக்கட்டு காளைகள் களத்தில் விளையாடும் போது அதன் கொம்புகளால் வீரர்கள் காயம்படாமல் இருக்க சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி முருகேசன் புதிய ரப்பர் கவசத்தை உருவாக்கியுள்ளார்.ஸ்பெயினில் நடக்கும் மாடுபிடி சண்டையில் மாடுகளின் கொம்புகளுக்கு ரப்பர் கவசம் பொருத்தப்படுகிறது. தமிழகத்தில் கொம்பால் குத்தவரும் மாடுகளை வெறும் கைகளால் வீரர்கள் அடக்க வருவர். எனவே வீரர்களின் உயிரைக் காப்பாற்றும் வகையில் ரப்பர் கவசம் கண்டுபிடித்தேன் என்கிறார் முருகேசன்.அவர் கூறியதாவது:
இந்த வகை கவசத்தை ஸ்பெயின் உட்பட வெளிநாடுகளில் இருந்து வாங்கி விற்பனை செய்யலாம் என நினைத்தேன். ஆனால் இறக்குமதி, சுங்கவரி செலவைக் கணக்கிடும் போது ஒரு ஜோடி கவசம் விலை ரூ.3500 ஐ தாண்டியது. இந்த விலை கொடுத்து ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர்கள் வாங்க மாட்டார்கள் என்பதால் நானே உருவாக்க நினைத்தேன். மோல்டு வாங்கி கடினப்படுத்தப்பட்ட ரப்பரை கொண்டு கொம்புகளுக்கு ஏற்ப மூன்று வெவ்வேறு அளவுகளில் இந்த கவசம் தயாரித்தேன். இதை ரூ.1500க்கு விற்கிறேன். இந்த ரப்பர் கவசம் கொம்பின் கூரான முனையில் தட்டையாக பொருந்தி விடும்.ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் போது மாடுகள் வீரர்களை குத்தி தாக்கினாலும் ரப்பர் கவசம் பெரிய அளவில் காயம் ஏற்படுத்தாது. வீரர்களும் துணிச்சலாக மாடுகளை அணுகமுடியும். காங்கேயம், புலிக்குளம், உம்பளச்சேரி, ஆலம்பாடி, பர்கூர் போன்ற தமிழக நாட்டு மாட்டு இனங்கள் தான் போட்டிகளில் பங்கேற்கின்றன. மாடுகள் துன்புறுத்தப்படாமல் விளையாடப்படுகிறது என்பதை இந்த ரப்பர் கவசத்தின் மூலம் உறுதிப்படுத்தும் அதேநேரத்தில் வீரர்கள் காயம்படுவதையும் தவிர்க்க முடியும்.தமிழக அரசு இந்த ரப்பர் கவசத்தை ஆய்வு செய்து போட்டி நடக்கும் போது ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு பொருத்த முன்வரலாம் அல்லது மானிய விலையில் மாட்டின் உரிமையாளர்களுக்கு விற்பனை செய்யலாம் என்றார்.தொடர்புக்கு:
81220 65829.