UPDATED : ஜன 09, 2024 12:00 AM
ADDED : ஜன 09, 2024 10:07 AM
சென்னை:
சென்னையில் நேற்று முன்தினம் துவங்கி நேற்று இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. சென்னையின் 47வது புத்தகக்காட்சி நடக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் தண்ணீர் தேங்கியது.இதனால், வாசகர்கள் சென்று வருவது மற்றும் வாகனங்களை நிறுத்துவது உள்ளிட்ட செயல்பாடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க நிர்வாகிகள் நேற்று அதிகாலையில் ஆலோசித்தனர்.புத்தகக்காட்சி அரங்கின் கூரை மற்றும் தரைப்பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதை அறிந்தனர். இதனால், நேற்று, ஒரு நாள் மட்டும் புத்தகக்காட்சியை ரத்து செய்து, பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.தேதி மாற்றம்
மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி இன்று நடத்த, பபாசி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. ஒரே நேரத்தில், 4,000 மாணவர்கள் புத்தகம் வாசிக்க இருந்த இந்த நிகழ்ச்சி, மழை பாதிப்பு காரணமாக, வரும் 12ம் தேதி காலை 10:00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளதாக, பபாசி அறிவித்துள்ளது.