கல்வி, தொழில் வளர்ச்சிக்கு உதவ டி.ஆர்.டி.ஓ., தயார்
கல்வி, தொழில் வளர்ச்சிக்கு உதவ டி.ஆர்.டி.ஓ., தயார்
UPDATED : ஜன 09, 2024 12:00 AM
ADDED : ஜன 09, 2024 11:22 AM
சென்னை:
கல்வி மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு உதவ, மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான, டி.ஆர்.டி.ஓ., தயாராக உள்ளது என அதன் தலைவர் சமீர் வி காமத் தெரிவித்தார்.சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், விண்வெளி, பாதுகாப்பு துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்த அமர்வில், அவர் பேசியதாவது:
சுதந்திர நுாற்றாண்டான 2047ல், தொழில்நுட்ப துறையில் இந்தியா தன்னிறைவு அடையும் லட்சியத்துடன், டி.ஆர்.டி.ஓ., ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி உள்ளது. டி.ஆர்.டி.ஓ.,வின் ஆய்வுக் கூடங்கள் அதிகமாக துவக்கப்பட்டு உள்ளன.முன்பெல்லாம், பாதுகாப்பு துறையில் பெருமளவு இறக்குமதி செய்து வந்தோம். தற்போது, 75 சதவீத பாதுகாப்பு தளவாடங்களை, நம் நாட்டிலேயே தயாரிக்கிறோம். மேலும், 16,000 கோடி ரூபாய் அளவுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதியும் செய்கிறோம். இது, அடுத்தடுத்த ஆண்டுகளில் பல மடங்கு உயரும்.பாதுகாப்பு தொழில் சார்ந்த பொறியியல் படிப்புகளுக்கு, டி.ஆர்.டி.ஓ., ஊக்கம் அளித்து வருகிறது. தமிழகம் மற்றும் உத்தர பிரதேசத்தில் தொழில் வழித்தட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.தொழில் துவங்குவதற்கான கட்டமைப்புகள், தமிழகத்தில் சிறப்பாக உள்ளன. பாதுகாப்பு தொழில் சார்ந்த கல்வி, தொழில் துறைக்கு உதவ டி.ஆர்.டி.ஓ., தயாராக உள்ளது. இவ்வாறு சமீர் வி காமத் பேசினார்.