UPDATED : ஜன 10, 2024 12:00 AM
ADDED : ஜன 10, 2024 09:39 AM
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காததால் மாணவர்கள் மழையில் நனைந்தப்படி பள்ளிகளுக்கு சென்றனர். இதனால் இவர்கள் வகுப்புகளில் கடும் குளிரில் நடுங்கிய நிலையில் அவதிப்பட்டனர்.திண்டுக்கல்லில் நேற்று அதிகாலை 4 : 00 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை விடாமல் கலை 7:00 மணி வரை பெய்ததது. மீண்டும் 8 :00 மணிக்கு லேசான துாரல் தொடங்கி நேரம் செல்ல செல்ல கொட்டித் தீர்த்தது. சீரான இடைவெளியில் மழை பெய்து நேற்று இரவு வரை நீடித்தது.பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் நனைந்து கொண்டே மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர். வகுப்பறைகளில் துணிகளை காயவைத்தாலும் குளிரால் நடுங்கினர்.தனியார் பள்ளிகளும் பள்ளி வேன்களை வழக்கம் போல் அனுப்பி வைத்தன . அப்படி சென்ற ஒரு பள்ளி வேன் நாகல்நகர் ஒத்த கண் பாலத்தில் நிரம்பியிருந்த தண்ணீரில் சிக்கியது. மாநகராட்சி, தீயணைப்புத்துறையினரால் மீட்கப்பட்டது. திருச்சி ரோடு, சந்தைரோடு, சாலை ரோடு, பழநி பைபாஸ், கடைவீதி, ஆர்.எம்.காலனி, நாகல்நகர் நத்தம் ரோடு என பல்வேறு இடங்களிலும் ரோடுகளில் மழைநீர் ஆறுபோல் ஓடின.மதுரை ரோடு நகர் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் சென்றன. நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் ஆறு போல் ஓடியால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.நாகல்நகர் பாரதிபுரத்தின் தாழ்வான பகுதிகள், எம்.வி.எம். நகர், ஒய்.எம்.ஆர்., பட்டி கோபால்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தால் குடியிருப்போர் அவதிக்கு உள்ளாகினர். ஆர்த்தி தியேட்டர் ரோட்டில் உள்ள உப்புகேணி விநாயகர் கோயிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். விவேகானந்தா நகர் பகுதியில் பல மாதங்களாக நடைபெறும் பாதாள சாக்கடை பணியினால் முழங்கால் அளவில் கழிவுநீர் தேங்கியது. வெள்ளை விநாயகர் கோயில் அருகே சந்திக்கும் 3 ரோடுகளிலும் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது.மழைநீர் சூழ்ந்திருந்த ஒத்தகண் பாலம் பகுதியினை கலெக்டர் பூங்கொடி, துணை மேயர் ராஜப்பா உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.வடமதுரை:
பாடியூர் புதுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் 3 பக்கமும் தனியார் தொழிற்சாலை , முகப்பில் முள்ளிப்பாடி குளத்துார் ரோடும் உள்ளது. சுற்றியிருக்கும் அனைத்து பகுதிகளும் மேடாக இருக்கும் நிலையில் கூட்டுறவு சங்க வளாகம் பள்ளத்தில் உள்ளது. இதனால் ஒவ்வொரு மழைக்கும் நீர் தேங்கி நிற்கிறது.இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அதிக மழை பெய்ததால் கூட்டுறவு வளாகம் முழுவதும் நீர் நிரம்பியது. இதனால் நேற்று திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டிருந்தது.திண்டுக்கல் திருச்சி நான்குவழிச்சாலை ,வடமதுரை ஒட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலை சந்திக்கும் பகுதி நால் ரோடு சந்திப்பு நீரில் முழ்கியது. அய்யலுாரில் ரயில்வே ஸ்டேஷன் இருக்கும் பகுதி சர்வீஸ் ரோட்டிலும் மழை நீர் தேங்கியது. இவ்வழியே நடந்தும், டூவீலர்களிலும் செல்வோரும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.மழையால் தாடிக்கொம்பு பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான கரும்புகள் சாய்ந்தன. விவசாயி கணேசன் கூறியதாவது:
விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதும் அரிதாக உள்ள நிலையில் எறும்பு, அணில், மயில் உள்ளிட்ட பிராணிகளில் இருந்து கரும்பை காப்பாற்றி கொண்டு வருவதற்கு பெரும் பாடாக உள்ளது. இந்த நிலையில் மழையால் ஆயிரக்கணக்கான கரும்புகள் சாய்ந்து எங்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்றார்.வேடசந்துார் ஆத்துமேடு கரூர் ரோட்டில் 50 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் மழையால் சாய்ந்தது.மாவட்டத்தில் திண்டுக்கல்லில் மதியம் 2:30 மணி நிலவரப்படி 91.8 மி.மீ ., பழநியில் 93.0 மி.மீ., மழை பெய்துள்ளது. அதிகாலை 21 டிகிரி செல்சியஸ் குளிர் இருந்த நிலையில் நேற்று மாலை 23 டிகிரி செல்சியஸ் அளவே நிலவியது. மீண்டும் நேற்று இரவு 21 டிகிரி செல்சியஸ் ஆனது. மழையோடு குளிரும் சேர்ந்ததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.மாவட்டத்தில் நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி 392.1 மி.மீ., மழை பதிவாகியது. கொடைக்கானல், பழநி, ஒட்டன்சத்திரம் என மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வருவதால் பழநியில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. குறிப்பாக வரதமாநதி அணை நிரம்பி வழிகிறது. 66 அடி உயர வரதமாநதி அணை முழு அளவை எட்டியதால் வரும் நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.65 அடி பாலாறு பொருந்தலாறு அணை 64 அடியை எட்டி உள்ளதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் வினாடிக்கு 1500 கன அடி நீர் அப்படியே சண்முகநதி ஆற்றில் வெளியேற்றப் படுகிறது. எனவே கரையோர கிராமப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேபோல், ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்து நிரம்பி வழிகிறது.பழநி:
பழநி பாளையம் ரோடு, ராஜாஜி ரோடு, திண்டுக்கல் ரோடு உள்ளிட்ட அனைத்து முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி சிறார்கள் சிரமம் அடைந்தனர். சாக்கடை நீரும் சாலையில் ஓடிய மழை நீரில் கலந்து சென்றதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டது. நகரப் பகுதிகளில் சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.