UPDATED : ஜன 10, 2024 12:00 AM
ADDED : ஜன 10, 2024 09:42 AM
திருப்பூர்:
திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், கோரிக்கையை வலியுறுத்தி, செவிலியர்கள் பேட்ஜ் அணிந்து பணியாற்றி வருகின்றனர்.பணி மூப்பில் உள்ள செவிலியர்களுக்கு பதவி உயர்வு, எம்.ஆர்.பி., ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், நேற்று முதல் வரும், 12ம் தேதி வரை, ஐந்து நாட்கள் கோரிக்கை அட்டையை பேட்ஜ்ஜாக அணிந்து பணிபுரிகின்றனர்.இது குறித்து, செவிலியர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ராஜேஷ் கண்ணன் கூறுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக உரிய நேரத்தில் செவிலியர் கண்காணிப்பாளர் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்படவில்லை.செவிலியர்களாக பணியில் இணைபவர்கள், 30 ஆண்டு முடிந்தாலும், செவிலியராக ஓய்வு பெறுகின்றனர். கண்காணிப்பாளர் நிலைக்கு உயர்த்துவதில்லை. கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும், என்றார்.